காத்மாண்டு நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 157 ஆக அதிகரித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில், 6.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் நுாற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின.
நம் அண்டை நாடான நேபாளத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து மேற்கே, 500 கி.மீ., தொலைவில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தை மையமாக வைத்து, ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக, தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம், காத்மாண்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக, ஜாஜர்கோட், ருகும் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டடங்கள், வீடுகள் குலுங்கின.
தஞ்சம்
இதனால் வீடுகளில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்த மக்கள், சாலைகளில் தஞ்சமடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு வீடு இடிந்து விடுமோ என்ற அச்சத்தால், இரவு பொழுதை சாலைகளிலேயே பொது மக்கள் கழித்தனர்.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, 159 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதாக, தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஜாஜர்கோட், ருகும் ஆகிய மாவட்டங்கள், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த மாவட்டங்களில் நுாற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 157 ஆக அதிகரித்துள்ளது. இதில், நல்காத் நகராட்சி துணை மேயர் சரிதா சிங்கும் உயிரிழந்துள்ளார்.
மேலும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.
பிரதமர் ஆய்வு
இதற்கிடையே நேற்று, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் பிரசண்டா, அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும்படி, அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கடந்த 2015ம் ஆண்டுக்கு பின், நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டில்லியிலும் அதிர்வு
நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம், நம் நாட்டின் புதுடில்லி, பீஹார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது. எனினும், நம் நாட்டில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. பீஹாரின் பாட்னா, கதிஹார், மோதிஹாரி உள்ளிட்ட இடங்களில், நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
செய்ய தயார்: பிரதமர்
சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். நேபாள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்