குருகிராம்: ரிஷப் சர்மா (27) ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் காய்கறிகள் விற்றுவந்தவர், கரோனா காலகட்டத்தில் கடும் இழப்பைச் சந்தித்தார். அதையடுத்து சைபர் மோசடிகளில் ஈடுபட ஆரம்பித்தவர், ஆறே மாதங்களில் ரூ.21 கோடி ஈட்டினார்.
பல்வேறு மாநிலங்களில் சைபர் மோசடிகளை மேற்கொண்டுவந்த அவரை, கடந்த மாதம் 28-ம் தேதி உத்தராகண்ட் மாநிலத்தில் சைபர் மோசடி பிரிவு காவல் துறை கைது செய்தது. 10 மாநிலங்களில் பதிவான 35 வழக்குகளில் ரிஷப் சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங் உட்பட வெளிநாடுகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சைபர் மோசடி கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய காவல் துறை, அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளது
இதுகுறித்து சைபர் மோசடி தடுப்பு போலீஸார் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர் ரிஷப் சர்மா வீதிகளில் காய்கறி, பழங்கள் விற்றுக்கொண்டிருந்தார். கரோனா ஊரடங்கு சமயத்தில் அவரது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடையை மூடிய அவர், குடும்பத்தை நடத்த வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருமானம் ஈட்டிக் கொண்டார். இந்த சமயத்தில், ரிஷப் சர்மா அவரது பால்யகால நண்பர் ஒருவரைச் சந்தித்தார். அவர் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்டு வருபவர். அவர் சர்மாவுக்கு மோசடி வலைப்பின்னல் குறித்து விளக்கி, அவரையும் அதில் ஈடுபடும்படி கூறியுள்ளார். இதையடுத்து சர்மாவும் சைபர் மோசடிகளில் ஈடுபட ஆரம்பித்தார். ஆறு மாதங்களுக்கு முன்பாக சைபர் மோசடியில் அவர் களம் இறங்கினார்.
அதற்குள்ளாக ரூ.21 கோடி ஈட்டியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார். 10 மாநிலங்களில் பதிவான 35 வழக்குகளில் ரிஷப் சர்மாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு வெளிநாட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.