சென்னை: தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நேற்று தொடங்கியது. 2-வது நாளாக இன்றும் முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்.27-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் 3 கோடியே 68 ஆயிரத்து 610 ஆண்கள், 3 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பெண்கள், 8 ஆயிரத்து 16 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், இறந்தவர்கள் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகளும் தொடங்கியுள்ளன. இப்பணிகள் டிச.9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கின. ஏராளமானோர் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் கோரியும் மனுக்கள் அளித்தனர். 2-வது நாளாக இன்றும் முகாம் நடைபெற உள்ளன.
நவ.18, 19-ல் சிறப்பு முகாம்: அதைத் தொடர்ந்து நவ.18, 19 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இவற்றில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், திருத்தம் செய்தலுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியலும் வைக்கப்பட்டுள்ளது. அதில், தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம்.