காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 157 பேர் உயிரிழந்தனர். 375-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நேபாளத்தின் ஜாஜர்கோட், ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இரு மாவட்டங்களிலும் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.
நேபாள அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நிலநடுக்கத்தால் இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 375-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அரசு தரப்பில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேபாள ராணுவம், காவல், ஆயுதப்படையை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
நேபாள பிரதமர் பிரசண்டா நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.
நேபாளத்தின் கர்னாலி மாகாண காவல் துறை தலைவர் பீம் தாகல் கூறும்போது, “ஜாஜர்கோட் மாவட்டத்தில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. ஜாஜர்கோட் மாநகராட்சி துணை மேயர் சரிதா சிங் உயிரிழந்தார். படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
நேபாளத்தில் ஏராளமான இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்காக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிரதமர் மோடி உதவிக்கரம்: இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து வருத்தம் அடைந்தேன். நேபாள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்திய தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஹரியாணா, பஞ்சாப், பிஹாரில் உணரப்பட்டது.
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிர்வுகள் ஏற்பட்டன. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலை, தெருக்களில் குவிந்தனர்.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோ, அயோத்தி, வாராணசி, மீரட், கோரக்பூர், பாராபங்கி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 விநாடிகள் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நகரங்களில் பல்வேறு வீடுகளில் விரிசல்கள் விழுந்தன. கோரக்பூரில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
மத்திய பிரதேச தலைநகர் போபால், சம்பல், சாகர், ரேவா, குவாலியர் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவானது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர், அபு மலை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியாணாவில் குர்காவ்ன், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் பஞ்சாப் தலைநகர் சண்டிகரிலும் நில அதிர்வு ஏற்பட்டது. பிஹார் தலைநகர் பாட்னா உட்பட அந்த மாநிலத்தின் 11 மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
இமயமலையில் ஏற்படுவது ஏன்?: இந்திய புவியியல் ஆய்வாளர் அஜய் பால் கூறியதாவது: இந்திய டெக்டோனிக் தட்டு வடக்கு நோக்கி நகர்ந்து யூரேசிய தட்டுடன் மோதுவதால் இமயமலைக்கு அடியில் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இமயமலை பிராந்திய பகுதிகளில் ரிக்டர் அளவுகோலில் 8 அளவுக்கு மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் எப்போது நிலநடுக்கம் ஏற்படும் என்பதை யாராலும் சரியாக கணிக்க முடியாது. இந்த பிராந்தியத்தில் வாழும் மக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இவ்வாறு அஜய் பால் தெரிவித்தார்.