மதுரை: மதுரை காமராசர் பல்கலை.யில் பணிபுரியும் பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியத்திற்காக ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.10.50 கோடி தேவை இருக்கிறது. இதற்கான நிதியை சேகரிப்பதில் பல்கலை நிர்வாகம் மாதந்தோறும் திணறுகிறது. போதிய வருவாய் இன்றி தொடர்ந்து இப்பல்கலை நிதி நெருக்கடியை சந்திப்பதே இதற்கு காரணம்.
கடந்த மாதத்திற்கான சம்பளம் , ஓய்வூதியம் நேற்று வரை வழங்கப்படவில்லை. பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் சம்பளம், ஓய்வூதியத்தை பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ஆளுநர் மற்றும் உயர்கல்வித்துறை செயலர் மற்றும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றும், விடிவு காலமின்றி தவிக்கின்றனர். தீபாவளி கொண்டாடுவதற்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் இப்பண்டிகையை கொண்டாடுவதில் சிரமத்தை சந்திக்கும் சூழலும் தற்போது உருவாகியுள்ளது.
இந்நிலையில், இப்பல்கலை வேதியியல் துறையை சேர்ந்த இணைப்பேராசிரியர் சிவக்குமார் என்பவர் பல்கலை வளாகத்தில் நவ.7ம் தேதி பல்கலை வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலை அருகே ஒருநாள் தனிநபராக உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளார். இருப்பினும், இதில் பங்கேற்க விரும்பும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்லாம் என, கூறி, அனைத்துத்துறை பேராசிரியர்களுக்கும் இ-மெயிலில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பாரம்பரியமிக்க இப்பல்கலையில் சம்பளம், ஓய்வூதியத்தை பெறுவதற்கு கூட்டாகவும், தனி நபராகவும் உண்ணாவிரதம், போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘நிதி நெருக்கடியை போக்க, இப்பல்கலை நிர்வாகம் தேவையான நடவடிக்கை மேற்கொண்டதாக தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் சம்பளம், ஓய்வூதியத்திற்கு காத்திருக்க வேண்டியுள்ளது. பணி செய்துவிட்டு சம்பளம் வருமோ, வராதோ என சந்தேகித்து பிறரிடம் குடும்ப செலவினங்களுக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது.
ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிரான போக்கு நிலவுகிறது. தற்போது, நடந்த பட்டமளிப்பு விழாவிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். இந்நிலை தொடர்ந்தால் இப்பல்கலையின் வளர்ச்சி, மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் எதிர்காலம் பாதிக்கும். நிதிநிலமை சீரமைக்க, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.