Sachin Tweet On Virat Kohli Century: விராட் கோலி இன்றைய தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒரு மிகப்பெரிய சாதனையை சமன் செய்துள்ளார். நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் சுற்றில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதிய நிலையில், விராட் கோலி அவரது 49ஆவது ஓடிஐ சதத்தை பதிவு செய்து சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) ஒருநாள் அரங்கில் 452 இன்னிங்ஸில்தான் அவரது 49ஆவது சதத்தை பதிவு செய்தார். ஆனால், விராட் கோலி தற்போது 277 இன்னிங்ஸிலேயே அவரது சாதனையை சமன் செய்துவிட்டார். விராட் கோலி இந்த தொடரிலேயே மூன்று முறை 80+ ரன்களை தாண்டிய நிலையில், சதத்தை பதிவு செய்ய தவறினார்.
இன்று விராட் கோலி (Virat Kohli) அவரது 35ஆவது பிறந்தநாளான நிலையில் அவர் இந்த சாதனை சதத்தை பதிவு செய்தார். அவர் 121 பந்துகளில் 10 பவுண்டரிகள் உள்பட 101 ரன்களை அடித்திருந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் 326 ரன்களை எடுத்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும், ரோஹித் 40 ரன்களையும் எடுத்தனர். தொடர்ந்து, தற்போது இந்திய அணி பந்துவீச்சிலும் மிரட்டி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அது ஒருபுறம் இருக்க விராட் கோலியின் இந்த சதம் குறித்து சச்சின் டெண்டுல்கர் அவரது X பக்கத்தில் வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். அதில்,”நன்றாக விளையாடினீர்கள் விராட். நான் இந்த வருடம் 49 இல் இருந்து 50க்கு போக 365 நாள்களை எடுத்துக்கொண்டேன். எனவே, நீங்கள் அடுத்த சில நாள்களிலேயே 49 இல் இருந்து 50க்கு சென்று எனது சாதனையை முறியடிப்பீர்கள் என நினைக்கிறேன், வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, 49 ஓடிஐ சதத்தை அடித்த சச்சின் கடந்த ஏப்ரல் மாதம் சச்சின் அவரது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இன்று விராட் அவரது சாதனை சமன் செய்துள்ள நிலையில், அதனை குறிப்பிடாமல் நகைச்சுவைக்காக தன்னை விட விரைவாக 50 எடுக்க வாழ்த்துகள் என குறிப்பிட்டிருப்பது நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. விராட் கோலியின் சாதனைக்கு பல மூத்த வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Well played Virat.
It took me 365 days to go from 49 to 50 earlier this year. I hope you go from 49 to 50 and break my record in the next few days.
Congratulations!!#INDvSA pic.twitter.com/PVe4iXfGFk
— Sachin Tendulkar (@sachin_rt) November 5, 2023
சச்சினின் பதிவு குறித்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே போட்டிக்கு பின் விராட் கோலியிடம் கேட்டதற்கு அவர்,”நான் இப்போது எனது மூளையில் எடுத்துக்கொள்வது மிகவும் அதிகம், என் ஹீரோவின் சாதனையை சமன் செய்வது எனக்கு ஒரு சிறப்பான விஷயம். பேட்டிங்கிற்கு வரும்போது அவர் மிகக் கச்சிதமாக இருக்கிறார். இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். நான் எங்கிருந்து வருகிறேன் என்று எனக்குத் தெரியும், நான் அவரை டிவியில் பார்த்த நாட்கள் எனக்குத் தெரியும். அவரிடமிருந்து அந்த பாராட்டைப் பெறுவது மிக முக்கியமான ஒன்று” என்றார்.