இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் விமானப்படை பயிற்சி தளம் மீது நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒன்பது பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் மூன்று விமானங்கள் சேதமடைந்தன.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டு விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி விமான தளம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, நேற்று காலை அதிரடியாக நுழைய முயன்ற ஒன்பது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, உஷாரடைந்த பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டை இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இறுதியில் பயங்கரவாதிகள் அனைவரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில், விமான தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று விமானங்கள் மற்றும் எரிபொருள் டேங்கர் ஒன்றும் சேதமடைந்ததாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும், தெஹ்ரீக் – இ- – தலிபான் பாகிஸ்தானின் கிளை அமைப்பான தெஹ்ரீக் – இ – ஜிஹாத் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இங்குள்ள பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களில் பயங்கரவாதிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்குப் பின் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
விமானப்படை பயிற்சி தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு அந்நாட்டு பொறுப்பு பிரதமர் அன்வாரூல் – அல் – ஹக்கர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement