சிக்கமகளூரு : மத்திய விவசாய இணை அமைச்சர் ஷோபாவின் நடவடிக்கையால், கம்போடியாவில் சிக்கி தவித்த, சிக்கமகளூரு இளைஞர் மீட்கப்பட்டுள்ளார்.
சிக்கமகளூரின் என்.ஆர்., புராவைச் சேர்ந்தவர் அசோக், 27. வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் ஏஜென்ட் ஒருவரின் மூலம், மூன்று மாதங்களுக்கு முன்பு, தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவுக்குச் சென்றார். அங்கு உள்ள, தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
இளைஞர்களின் மொபைல் போனை முடக்கி, அதில் இருக்கும்தகவல்களை எடுத்து, பணம் பறிக்கும் வேலை யை, அசோக்கிற்கு, அந்த நிறுவனம் கொடுத்தது. அவர் செய்ய மறுத்தார்.
இதனால் பாஸ்போர்ட், விசாவை நிறுவனத்தினர் பறித்தனர். 13 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு, இந்தியா செல்லும்படி கூறினார். இதுபற்றி தன்னை வேலைக்கு அனுப்பிய ஏஜென்டிடம் கூறி, காப்பாற்றும்படி அசோக் கூறியுள்ளார்.
ஆனால் பணத்தை கொடுத்துவிட்டு, ஊருக்கு வரும்படி சொல்லிவிட்டு, ஏஜென்ட் இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து மத்திய விவசாய இணை அமைச்சரும், சிக்கமகளூரு தொகுதி பா.ஜ., – எம்.பி.,யுமான ஷோபாவின் கவனத்திற்கு, அசோக்கின் பெற்றோர் கொண்டு சென்றனர். இதையடுத்து கம்போடியாவில் உள்ள, இந்திய துாதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ஷோபா பேசினார்.
துாதரக அதிகாரிகள், அசோக் வேலை செய்த நிறுவனத்திற்கு நேற்று சென்றனர். அசோக்கை பத்திரமாக மீட்டனர். இன்னும் ஒரிரு நாட்களில் அவர், இந்தியா திரும்புவார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement