வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா : தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி 243 ரன்னில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி 326 ரன்கள் குவித்தது. விராட் கோஹ்லி தனது 49வது சதம் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்தார்.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (நவ., 05) நடந்த லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடத்தில் உள்ள இந்தியா (14 புள்ளி), தென் ஆப்ரிக்க (12) அணிகள் மோதின. இந்த போட்டியில் ‛டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, இந்தியாவின் ரோகித், சுப்மன் கில் அதிரடி துவக்கம் தந்தனர். ரன்ரேட் 10க்கு கீழ் குறையாதபடி இருவரும் அதிரடி காட்டினர். ரோகித் 40 ரன்னில் கேட்சானார். சுப்மன் 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரைசதம் கடந்தனர். ஸ்ரேயாஸ் 77 ரன்னில் கேட்சானார். அடுத்துவந்த லோகேஷ் ராகுல் (8), சூர்யகுமார் (22) நிலைக்கவில்லை.
சாதனை சமன்
சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் தனது 49வது சதம் அடித்து தனது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசை அளித்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்களில் இந்தியாவின் சச்சினுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. விராட் கோஹ்லி (101 ரன்), ரவீந்திர ஜடேஜா (29) அவுட்டாகாமல் இருந்தனர்.
327 ரன் வெற்றி இலக்குடன் அடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்கா அணி 27.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களுக்கு சுருண்டது.இதனைதொடர்ந்து 243 ரன்னில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இத்துடன் இந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து 8 வது வெற்றி கிடைத்தது.
புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய பவுலர்கள் பந்துவீச்சிற்கு தாக்குபிடிக்காமல் தென்ஆப்ரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement