crime news | 50 மாணவியரிடம் பாலியல் சீண்டல்: பள்ளி முதல்வருக்கு வலை

50 மாணவியரிடம் பாலியல் சீண்டல்: தப்பிய பள்ளி முதல்வருக்கு ‘வலை’

சண்டிகர்: ஹரியானாவில், அரசு பள்ளியில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியரிடம், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானாவின், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படிக்கும், 50க்கும் மேற்பட்ட மாணவியர், பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, மாநில மகளிர் கமிஷனிடம் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யும்படி, போலீசாருக்கு மாநில மகளிர் கமிஷன் அறிவுறுத்தியது.

இதற்கிடையே, பாலியல் புகாருக்கு உள்ளான பள்ளி முதல்வரை, மாவட்ட கல்வி நிர்வாகம் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்தது. இதையடுத்து, பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக, ஹரியானா மகளிர் கமிஷன் தலைவர் ரேணு பாட்டியா கூறியதாவது:

பள்ளி முதல்வர் குறித்து மாணவியரிடம் இருந்து, 60க்கும் மேற்பட்ட எழுத்துப்பூர்வமான புகார்கள் வந்துள்ளன.

மாணவியரை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து, பள்ளி முதல்வர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக, மாணவியரிடம் இருந்து, செப்., 13ல் புகார் வந்தது. அடுத்த நாளே நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு பரிந்துரை செய்தோம்.

ஆனால், அக்., 29 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து, மாணவியர் மீண்டும் எங்களை தொடர்பு கொண்டனர். பின், ஜிந்த் மாவட்ட எஸ்.பி.,யுடன் நாங்கள் பேசியதை அடுத்து, இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, தலைமறைவான, 55 வயதாகும் பள்ளி முதல்வரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழக நிகழ்வுகள்

விதிமீறி பட்டாசு பதுக்கிய அ.தி.மு.க., கவுன்சிலர் கைது

பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே, செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் தங்கபாண்டியன், 39; ஜெயங்கொண்டம் நகராட்சி, 1வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர். இவர், செங்குந்தபுரம், பஸ் ஸ்டாப் அருகே, தற்காலிக பட்டாசு கடை வைத்துள்ளார்.

இவரது கடை மற்றும் கடை பின்புறம் உள்ள கிடங்குகளில் அளவுக்கு அதிகமாக பட்டாசு மற்றும் நாட்டு வெடிகள் பதுக்கி வைத்திருப்பதாக ஜெயங்கொண்டம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சோதனை செய்ததில், கிடங்கில், 25 மூட்டைகளில் 550 கிலோ எடையில் நாட்டு பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததும், மற்ற இரண்டு கிடங்குகளில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

தங்கபாண்டியனை கைது செய்த போலீசார், மூன்று கிடங்குகளையும் பூட்டி சீல் வைத்தனர்.

அவதுாறு பரப்பிய ஆசிரியர் ‘சஸ்பெண்ட்’

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த ஜிங்களூர் அரசு உருது நடுநிலைப்பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர் பாலகிருஷ்ணன், 49. இவரை, நேற்று ‘சஸ்பெண்ட்’ செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆனந்தன் உத்தரவிட்டார்.

கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

உயர் அதிகாரிகளை பாலகிருஷ்ணன் தரக்குறைவாக பேசுவதும், அவதுாறு பரப்புவதையும் வழக்கமாக கொண்டவர். அரசை விமர்சித்த விவகாரத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.

தற்போதும் மாவட்ட சி.இ.ஓ., முதல் அனைத்து அதிகாரிகள் மீதும் அவதுாறுகளை பரப்பியுள்ளார். இது குறித்த விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அவரது சான்றிதழ்கள் போலி என்பன உள்ளிட்ட தகவல்களும் வந்துள்ளன. அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போக்சோ கைதியை பிடிக்க முயன்ற போலீசுக்கு வெட்டு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, ஆனந்த நகரை சேர்ந்தவர் பனை தொழிலாளி ஜேசுராஜ், 44. இவரை போக்சோ சட்டத்தில், 2021ல் போலீசார் கைது செய்தனர்.

வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜேசுராஜ் இரு முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

தொடர்ந்து நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. ஜேசுராஜை கைது செய்ய வாலிநோக்கம் போலீஸ்காரர் காளிமுத்து, 32, ராதாகிருஷ்ணன், 34, சிக்கல் போலீஸ்காரர் அதிவீரபாண்டியன், 34, ஆகிய மூவரும் நேற்று காலை, 10:00 மணிக்கு சென்றனர்.

வீட்டில் இருந்த ஜேசுராஜ் சட்டை போட்டு வருவதாக வீட்டிற்குள் சென்றார். பின், பனை சீவும் அரிவாளுடன் போலீஸ்காரர்களை வெட்ட விரட்டினார். இதில், கீழே விழுந்த காளிமுத்துவை தொடை, இடுப்பு பகுதியில் வெட்டினார்.

அதன் பின் கிராம மக்கள் ஜேசுராஜை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த காளிமுத்து ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

எஸ்.ஐ.,க்கு அடி; ஆர்வலருக்கு வெட்டு மணல் கடத்தல் கும்பல் அட்டூழியம்

வேலுார்: வேலுார் அருகே, மணல் கடத்தலை தடுத்த எஸ்.ஐ.,யை சரமாரியாக தாக்கிய நிலையில், மற்றொரு சம்பவத்தில் சமூக ஆர்வலரான ஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு கத்திக்குத்து விழுந்தது.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்ன தோட்டாளம் கிராமத்தை சேர்ந்த சிலர், மாட்டு வண்டிகளில் பாலாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்துவதாக, மேல்பட்டி தனிப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ., மணவாளனுக்கு புகார் சென்றது.

நேற்று முன்தினம் நள்ளிரவில், மணவாளன் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது, அதே பகுதியை சேர்ந்த இருவர், மாட்டு வண்டியில் மணல் கடத்தினர்.

அவர்களை பிடிக்க முயன்ற போது, மணல் கடத்தல்காரர்கள், எஸ்.ஐ., மணவாளனை சரமாரியாக தாக்கி தப்பினர். குடியாத்தம் டி.எஸ்.பி., ராமமூர்த்தி தலைமையிலான போலீசார், கிராமத்தில் முகாமிட்டு, தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், வேலுார் மாவட்டம், பொன்னை அடுத்த கொக்கேரியை சேர்ந்த சகோதரர்கள் முனுசாமி, 45, குமரேசன், 43, குமரேசனின் மகன்கள், சூர்யா, 23, பிரகாஷ், 20, ஆகியோர் அணைக்கட்டு பொன்னையாற்றில் நேற்று முன்தினம் இரவு மணல் கடத்தலில் ஈடுபட்டனர்.

இதை, அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உமாபதி, 40, வீடியோ எடுத்தார்.

இதைப்பார்த்த நான்கு பேரும் உமாபதியை வெட்டி விட்டு, அவரிடமிருந்த மொபைல்போனை உடைத்து தப்பினர்.

படுகாயமடைந்த உமாபதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்பாடி போலீசார் குமரேசனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.

வாலிபர் கொலை

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த துாசி நத்தகொள்ளையைச் சேர்ந்தவர் செல்வராஜ், 30. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு நண்பர் வீட்டிற்கு சென்று வருவதாக, வீட்டில் கூறிச் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

நேற்று காலை, வெம்பாக்கம் அடுத்த காஞ்சிபுரம் – கலவை சாலை பகுதியில் உள்ள குளக்கரை எதிரே கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

வக்கீல் வெட்டி கொலை உறவினர்கள் மறியல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அடுத்த வரகூரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 40; வக்கீல். இவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து துறையூர் சாலையில் உள்ள தன் வீட்டுக்கு டூ – வீலரில் சென்று கொண்டிருந்தார்.

செல்லிபாளையம் ஏரி அருகே சென்றபோது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், வழிமறித்து சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார்.

நாமக்கல் எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், நேரில் விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மணிகண்டனை கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் மற்றும் வக்கீல்கள், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் மறியல் செய்தனர். போலீசார் பேச்சையடுத்து, மறியலை கைவிட்டனர். மீண்டும், நேற்று மதியம், 1:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.

ரூ.30 லட்சம் மோசடி செய்த தலைமறைவு தம்பதி கைது

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், கக்கன் நகரைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ், ௬௦, கலா, 56. இருவரும் பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தினர்.

கருங்கல்பாளையம், கக்கன் நகர், கிருஷ்ணம்பாளையம், ராமமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள், தீபாவளி சிறு சேமிப்பு சீட்டு சேர்ந்தனர்.

அக்., மாதம் சீட்டு முதிர்வு அடைந்தவர்கள், தம்பதியிடம் பணம் கேட்டனர். ஆனால், தம்பதி தலைமறைவாகினர்.

பாதிக்கப்பட்ட, 70க்கும் மேற்பட்டோர், கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இதில், 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவான இருவரையும் தனிப்படை போலீசார் தேடினர்.

திருச்சி, காந்தி நகரில் அவர்கள் கடை நடத்துவதும், அரியமங்கலத்தில் வசிப்பதையும் போலீசார் கண்டுபிடித்து, இருவரையும் கைது செய்தனர்.

மருத்துவ மாணவி தற்கொலை பயிற்சி மாணவ-ருக்கு சம்மன்

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி சுகிர்தா கல்லூரி விடுதியில் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். சீனியர் பயிற்சி மாணவர் ஹரீஷ், பயிற்சி மாணவி ப்ரீத்தி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருவரும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நவ., 7 இருவரும் விசாரணைக்காக நாகர்கோவில் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

எத்தனை நாள் விசாரணை நடத்தப்படும் என்பது உறுதி செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

பட்டு சேலை கடைக்கு வெடிகுண்டு மிரட்டல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தி.மு.க., – எம்.எல்.ஏ., மற்றும் பிரபல பட்டு சேலை கடைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று மாலை அழைத்த மர்ம நபர், ‘சேக்குப்பேட்டை ‘பாபு ஷா’ பட்டு சேலை விற்பனை கடையில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன்’ எனக்கூறி, இணைப்பை துண்டித்துள்ளார்.

அதேபோல், காஞ்சிபுரம் ரயில்வே சாலையி

latest tamil news

ல் உள்ள, தி.மு.க.,- – எம்.எல்.ஏ., எழிலரசன் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும் மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து, காஞ்சிபுரம் டி.எஸ்.பி., ஜூலியஸ் சீசர், உடனடியாக பட்டு சேலை கடைக்கு சென்று, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றினார்.

மெட்டல் டிடெக்டர் கருவி, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், கடை முழுதும் சோதனை செய்யப்பட்டது. எம்.எல்.ஏ., வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டது.

மிரட்டல் விடுத்த நபர் பயன்படுத்திய மொபைல் எண், எங்கிருந்து யார் பேசியது என, போலீசார் விசாரிக்கின்றனர்.

வேலு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை

அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் நேற்று இரண்டாம் நாளாக, வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையை தொடர்ந்தனர்.

தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் வேலு, 61. இவரது வீடு, அவரது கல்வி நிறுவனங்கள் மற்றும் அவருடன் தொடர்பில் உள்ளோர் வீடு என, தமிழகம் முழுதும், 80 இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தினர்.

இரண்டாவது நாளாக நேற்று திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் உள்ள வேலுவின் மகன் கம்பன் வீடு,கான்ட்ராக்டர் வெங்கட் வீடு, வேலுவிற்கு சொந்த மான, தென்மாத்துார் கிராமத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் சோதனை நடந்தது.

கரூர்

கரூர், பெரியார் நகரில் உள்ள முன்னாள் தி.மு.க., மாவட்ட செயலர் வாசுகி முருகேசனின் தங்கை பத்மா வீடு, சுரேஷ் என்பவரது நிதி நிறுவனம் மற்றும் வீடு, புஞ்சை தோட்டக்குறிச்சியில் சுரேஷ் மாமனார் சக்திவேல் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடந்தது.

சக்திவேல் வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை நிறைவு பெற்றது.

மற்ற மூன்று இடங்களில் நேற்று சோதனை தொடர்ந்தது. துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

கோவை

கோவை, ராமநாதபுரம் பார்சன் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு துணை செயலர் மீனா ஜெயகுமார் வீட்டில், நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.

பீளமேட்டில் உள்ள ‘ஷீ பீல்டு’ என்ற நிறுவனத்திலும், சவுரிபாளையத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன அலுவலகத்திலும், இரண்டாவது நாளாக சோதனை நடத்தப்பட்டது.

நேற்று கூடுதலாக, சிங்காநல்லுார் கள்ளிமடையில் உள்ள, அந்த கட்டுமான நிறுவன முன்னாள் இயக்குனர் செந்தில்குமார் வீட்டிலும், அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மீனா ஜெயகுமாரின் மகன் ஸ்ரீராம், கோவை தி.மு.க., கிழக்கு மண்டல முன்னாள் தலைவர் எஸ்.எம்.சாமி வீடுகளில் நடந்து வந்த சோதனை நிறைவடைந்தது. அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம்

விழுப்புரத்தில், அமைச்சர் வேலுவின் நண்பரான, வணிகர் சங்க கூட்டமைப்பு மாவட்ட பொதுச் செயலர் பிரேம்நாத் வீடு, அவருக்கு சொந்தமான கடைகள், லாட்ஜ் ஆகியவற்றில், நேற்று இரண்டாவது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரது வங்கிக் கணக்கு ஆவணங்கள், தொழில் முதலீடுகள் மற்றும் லாட்ஜ் வருவாய் பற்றியும் விசாரணை செய்தனர். மாலை 4:00 மணி வரை நடந்த சோதனையில், முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்திய நிகழ்வுகள்

அம்பானிக்கு மிரட்டல்: இளைஞர் கைது

மும்பை: உலக பணக்காரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை, போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், ரிலையன்ஸ் குழும தலைவரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, 66, குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவருக்கு கடந்த மாதம் 27ம் தேதி, ‘இ – மெயில்’ எனப்படும் மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்தது.

அதில், ‘நீங்கள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால் உங்களை கொன்று விடுவோம்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து, முகேஷ் அம்பானி தரப்பில் மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மறுநாளே, அவரது நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 200 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் வந்தது.

இதற்கிடையே, மூன்றாவது முறையாக இதேபோல் அதே மின்னஞ்சல் முகவரிக்கு, 400 கோடி ரூபாய் கேட்டு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இது குறித்து குற்றப் பிரிவு மற்றும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், போலி மின்னஞ்சல் கணக்கு வாயிலாக மிரட்டல் விடுத்ததை போலீசார் உறுதி செய்தனர்.

இந்நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த கணேஷ் ரமேஷ், 19, என்ற இளைஞர் போலி மின்னஞ்சல் கணக்குகளின் வாயிலாக முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்ததை கண்டறிந்து கைது செய்தனர்.

இவர், எதற்காக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மகனை பிடிக்க வந்த போலீசை துப்பாக்கியால் சுட்ட தந்தை

கண்ணுார்: கேரளாவில், குற்ற வழக்கில் தேடப்படும் இளைஞரை பிடிக்க வந்த போலீசார் மீது, அவரது தந்தை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள சிராக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ரோஷன்.

இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை, இவர் சமீபத்தில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், நேற்று அவரை கைது செய்ய ரோஷனின் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது, அங்கிருந்த அவரது தந்தை பாபு தாமஸ், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், பாபு தாமஸ் மற்றும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலின் நடுவே ரோஷன் தப்பிச் சென்றார்.

இதையடுத்து, அவரது தந்தை பாபு தாமசை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, போலீசார் குண்டர்களை அழைத்து வந்து வீட்டில் தாக்குதல் நடத்தியதாக ரோஷனின் தாய் லிண்டா குற்றம்சாட்டி உள்ளார்.

பாபு தாமஸ் உரிமமின்றி துப்பாக்கி வைத்திருந்ததாக போலீசார் கூறியதையும், அவர் மறுத்துள்ளார்.

கேரளாவில் சிறுமி கொலை பீஹார் வாலிபர் குற்றவாளி

கொச்சி: கேரளாவில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பீஹாரைச் சேர்ந்த இளைஞர் குற்றவாளி என, போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமியை, அதே பகுதியில் வசித்த, பீஹாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளி அஷ்வக் ஆலம் என்பவர், கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.

இந்த சம்பவம், கடந்த ஜூலை 28ல் நடந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் அஷ்வக் ஆலமை கைது செய்தனர்.

இந்த வழக்கில், 30 நாட்களில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

எர்ணாகுளத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, நேற்று தீர்ப்பு அளித்த நீதிபதி கே.சோமன், ”அஷ்வக் ஆலம் குற்றவாளி,” என, தீர்ப்பு அளித்தார்.

இதன்படி, சம்பவம் நடந்த 100 நாட்களுக்குள் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது.  அஷ்வக் ஆலம் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, அவருக்கான தண்டனை விபரங்கள், வரும் 9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.