பெங்களூரு:கர்நாடகாவில் சுரங்கம் மற்றும் நில ஆய்வியல் துறையின் பெண் அதிகாரி,
பெங்களூரில் மர்ம கும்பலால் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.சட்ட
விரோதமாக செயல்பட்ட கல்குவாரியை மூடியதே, இவரது கொலைக்கு காரணம் என,
சந்தேகிக்கப்படுகிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. ஷிவமொகா மாவட்டம், தீர்த்தஹள்ளியைச் சேர்ந்தவர் பிரதிமா, 37. இவர், பெங்களூரில் சுரங்கம் மற்றும் நில
ஆய்வியல் துறையின் உதவி இயக்குனராக பணியாற்றினார். 15 ஆண்டுகளுக்கு முன்
திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
மொபைல் போன்
பெங்களூரு, தொட்டகல்லசந்திரா என்ற இடத்தில் கோகுலா அடுக்கு மாடி குடியிருப்பில்,
பிரதிமா தனியாக வசித்தார். இவரது கணவரும், மகனும் தீர்த்தஹள்ளி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர். வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்ற பிரதிமா, இரவு 8:30 மணியளவில், அரசு வாகனத்தில் வீடு திரும்பினார். இவரை வீட்டருகில், ‘டிராப்’ செய்து விட்டு ஓட்டுனர் சென்றுவிட்டார். பிரதிமா வீட்டுக்குள் சென்றார்.
அவர் வருவதற்காகவே காத்திருந்த மர்ம கும்பல், அவருடனே வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியது.
பிரதிமாவின் அண்ணன் பிரதீஷ், பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர். இவர், இரவு தங்கையை மொபைல் போனில் பல முறை முயற்சித்தும் எடுக்கவில்லை.’தங்கை துாங்கியிருக்கலாம்; காலை சென்று பார்க்கலாம்’ என, பிரதீஷ் மவுனமாகி விட்டார்.
நேற்று காலை 8:30 மணியளவில், தங்கை வீட்டுக்கு அவர் சென்றபோதுதான், பிரதிமா கொலையானது தெரிந்தது.அவரது தகவலின்படி, அங்கு வந்த போலீசார், விசாரணையை துவக்கினர். கொலையாளிகளை கண்டுபிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.சுரங்கம்
மற்றும் நில ஆய்வியல் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கூறுகையில், ”பிரதிமாவின் கொலையில், பல சந்தேகங்கள் உள்ளன. துறை அளவில் அவருக்கு எந்தவிதமான தொந்தரவும் இருக்கவில்லை.”சிலர் குடும்ப பிரச்னை இருந்ததாக கூறுகின்றனர். எனவே அனைத்து கோணங்களிலும், விசாரணை நடக்கும்,” என்றார்.
விசாரணை
கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறுகையில், ”சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரி
பிரதிமா கொலைக்கு என்ன காரணம் என்பது தெரிய வில்லை. விசாரணை நடக்கிறது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவர்,” என்றார்.
கொலைக்கான பின்னணி என்ன?
பெங்களூரின், ஹுனசமாரனஹள்ளி கிராமத்தில், லைசென்ஸ் பெறாமல் சட்டவிரோதமாக கல்குவாரி நடத்துவதாக புகார் வந்தது. அங்கு சென்று ஆய்வு செய்த பிரதிமா, அந்த கல்குவாரியை மூடினார். இது தொடர்பாக, அரசுக்கும் அறிக்கை அளித்திருந்தார். இதுவே, அவரது கொலைக்கு காரணமாக இருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூரு நகர் மாவட்ட கலெக்டர் தயானந்த், பிரதிமாவின் வீட்டுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின் அவர் கூறியதாவது:சுரங்கத் துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, நெருக்கடி அதிகம் இருக்கும். சட்டவிரோத கல்குவாரிகளை தடுப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவர்களின் பொறுப்பாகும். பிரதிமா பயமின்றி பணியாற்றினார். நேர்மையான, தைரியமாக பெண் அதிகாரி.
சமீபத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுப்பது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் பிரதிமாவும் பங்கேற்றார். சட்டவிரோத சுரங்கத் தொழிலை தடுக்கும்படி கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. இதன்படி அவர் விசாரணை நடத்தி, என்னிடம் அறிக்கை அளித்திருந்தார்.
அதிகாரிகள், தங்களின் கடமையை செய்யும் போது, சில மிரட்டல், இடையூறுகள் வரும். ஆனால் இதைப்பற்றி பகிரங்கமாக பேசுவது சரியல்ல. போலீசார் விசாரணை நடத்தி, பெண் அதிகாரியை கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்