உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
விராட் கோலி மிகச்சிறப்பாக ஆடி சதமடித்திருக்கிறார். இதன் மூலம் ஓடிஐ போட்டிகளில் 49 சதங்கள் என அதிக சதங்கள் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்திருக்கிறார்.

இந்தப் போட்டியில் முதல் 10 ஓவர்களில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி ரன்ரேட்டை சரசரவென எகிற வைத்திருந்தார். அவர் 24 பந்துகளில் 40 ரன்களை அடித்து அவுட் ஆகியிருந்தார். இந்நிலையில்தான் நம்பர் 3 இல் விராட் கோலி களமிறங்கினார். இன்னொரு ஓப்பனரான கில்லும் பெரிதாக நின்று ஆடவில்லை. அவரும் 23 ரன்களிலேயே கேசவ் மகாராஜின் பந்தில் ஆட்டமிழந்தார். நம்பர் 4 இல் ஸ்ரேயாஸ் ஐயர் வந்தார். ஓப்பனர்கள் இருவரும் வேகமாக அவுட் ஆனதால் நின்று நிதானமாக அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பு விராட் கோலிக்கு ஏற்பட்டது. இன்னொரு பக்கம் ஸ்ரேயாஸ் ஆடிக்கொண்டிருந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் செட்டில் ஆக நிறைய நேரம் எடுத்தார். நிறைய டாட்கள் ஆடினார்.

இந்த சமயத்திலும் ஸ்கோரை உயர்த்த வேண்டிய பொறுப்பு கோலியிடமே இருந்தது. கோலியும் ஸ்ட்ரைக்கை நன்நாக ரொட்டேட் செய்துகொண்டே இருந்தார். கேசவ் மகாராஜவின் பந்தில் சில இடங்களில் தடுமாறவும் செய்தார். கோலி கொடுத்த சில கேட்ச் வாய்ப்புகளை கீப்பர் டீகாக்கும் தவறவிட்டார். ஒரு பந்தில் ரிவியூவ்வில் நூலிழையில் எட்ஜ்ஜிலிருந்தும் தப்பினார் கோலி.
67 பந்துகளில் கோலி அரைசதத்தை எட்டியிருந்தார். இந்த சமயத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் செட்டில் நன்றாக அடித்து ஆட ஆரம்பித்துவிட்டார். அது கோலிக்கு இன்னும் உறுதுணையாக இருந்தது. கோலி கொஞ்சம் செகண்ட் ஃபிடில் ஆட ஸ்ரேயாஸ் இறங்கி கலக்கினார். சில ஷார்ட் பால்களையும் நன்றாக ஆடினார். ரன்ரேட்டும் எகிற ஆரம்பித்தது. ஆனால் ஸ்ரேயாஸும் நீடிக்கவில்லை. 77 ரன்களில் லுங்கி இங்கிடியின் பந்தில் அவுட் ஆனார். கே.எல்.ராகுலும் வந்த வேகத்தில் 8 ரன்களிலேயே அவுட் ஆனார். இதனால் கோலியின் மீதான பொறுப்பு இன்னும் கூடியது. தப்ரேஸ் ஷம்சி, இங்கிடி, ரபாடா என அபாயமாக வீசிய தென்னாப்பிரிக்க பௌலர்களை பக்குவத்தோடு சிறப்பாக எதிர்கொண்டு மெது மெதுவாக கோலி சதத்தை நெருங்கினார்.

ஈடன் கார்டனில் கூடியிருந்த 70000 க்கும் அதிகமான ரசிகர்கள் தங்கள் மொபைல் விளக்கை காற்றில் வீசி ஆர்ப்பரிக்கத் திரண்டு நின்று மிளிரும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு அரசன் உலா வருவதைப் போல இருந்தது. ரபாடா வீச தான் எதிர்கொண்ட 119 வது பந்தை எக்ஸ்ட்ரா கவரில் தட்டிவிட்டு சதத்தை எட்டினார் கோலி. 35 வது பிறந்தாளை இன்று கொண்டாடும் கோலி ஓடிஐ போட்டிகளில் பதிவு செய்யும் 49 வது சதம் இதுவாகும். இதற்கு முன் ஓடிஐ போட்டிகளில் அதிக சதம் அடித்திருந்தவர் எனும் சாதனையை சச்சினே வைத்திருந்தார். சச்சின் 49 சதங்களை அடித்திருந்தார். சச்சினின் சாதனையை விராட் கோலி இப்போது சமன் செய்திருக்கிறார். சச்சின் 452 இன்னிங்ஸ்களில் அடித்த 49 சதங்களை கோலி வெறும் 277 இன்னிங்ஸ்களிலேயே எடுத்துவிட்டார். கோலியின் சிறப்பான இன்னிங்ஸால் இந்திய அணி 50 ஓவர்களில் 326 ரன்களை எடுத்திருக்கிறது.
ஆட்டதிற்கு பிறகு கோலி பேசுகையில், “பிட்ச் ஆடுவதற்கு கொஞ்சம் சிரமமானதாக இருந்தது. ஆட்டம் செல்ல செல்ல பிட்ச் மெதுவாக மாறியது. கடைசி வரை நின்று ஆட வேண்டியதுதான் எனக்கான பணியாக இருந்தது. ஸ்ரேயாஸ் ஐயரும் நானும் நன்றாகவே பார்டனர்ஷிப் அமைத்திருந்தோம். ஹர்திக் இல்லாததால் கடைசி வரை நின்று ஆடுவதற்கான தேவை இருந்தது.

இந்திய அணிக்கு ஆடுவதற்காக கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையுமே நான் முக்கியமானதாகத்தான் பார்க்கிறேன். இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்திற்கு மத்தியில் என்னுடைய பிறந்த தினத்தில் இப்படியொரு சதத்தை அடித்ததில் மகிழ்ச்சி.” என்றார். வாழ்த்துகள் கோலி!