இந்திய-வங்கதேச வேலியில் தேனீக்கள் வளர்ப்பு: குற்றங்களை தடுக்க பிஎஸ்எஃப் புதிய வியூகம்

புதுடெல்லி: இந்திய-வங்கதேச எல்லையிடையே போடப்பட்ட வேலிகளில் தேனீக்களை வளர்ப்பதன் மூலம் ஊடுருவல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க எல்லைப் பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிஎஸ்எஃப் உயரதிகாரி சுஜீத் குமார் கூறியதாவது:

எல்லைக் குற்றங்களைத் தடுக்கவும், உள்ளூர் மக்களிடம் ஊதியத்தை உருவாக்கும் வகையிலும் ஆயுஷ் அமைச்சகத்தின் உதவியுடன் இந்த புதிய திட்டத்தை பிஎஸ்எஃப்-ன் 32-வது பட்டாலியன் செயல்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் வங்கதேச நாடுகள் 4,096 கி.மீ. நீளமுள்ள எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில், மேற்கு வங்க மாநிலத்தின் பங்கு சுமார் 2,217 கி.மீ. அளவுக்கு உள்ளது.

குறிப்பாக, நாடியா மாவட்டத்தில் பிஎஸ்எஃப்-ன் தெற்கு வங்காள எல்லையில் தங்கம், வெள்ளி, போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பல்வேறு இடங்களில் வேலிகள் துண்டிக்கப்பட்டு சேதப்படுத்தப்படுகின்றன.

இதனை கட்டுப்படுத்தும் வகையில், வேலியில் தேனீ வளர்க்கும் புதிய வியூகத்தை பிஎஸ்எஃப் முதன் முறையாக முன்னெடுத்துள்ளது. இதற்கு தேவையான அலாய் உலோகத்தில் செய்யப்பட்ட ஸ்மார்ட் வேலி, தேனீக்களை வளர்ப்பதற்கான நிபுணத்துவம், அதற்கு தேவையான பொருட்கள் மற்றும் தேனீக்களை எல்லைப் பாதுகாப்பு படைக்கு ஆயுஷ் அமைச்சகம் வழங்கியுள்ளது.

எல்லையில் உள்ள வேலிப் பகுதிகளில் தேனீக்கள் கூடுகளை கட்டி எழுப்பும்போது அதனை வெட்டி ஊடுருவ முயலும் கடத்தல்காரர்கள் மீது தேனீக்கள் திரளாக கூடி தாக்குதல் நடத்தி காயத்தை ஏற்படுத்தும்.

கிராம மக்களிடம் வரவேற்பு: இதனால், எல்லை குற்றங்கள் குறையும் என்பதுடன், உள்ளூர் மக்களுக்கும் தேனீ வளர்ப்பு நடவடிக்கை மூலம் வேலை வாய்ப்புகள் பெருகி வருமானமும் அதிகரிக்கும். இந்திய-வங்கதேச எல்லை வேலிகளில் தேனீ வளர்க்கும் திட்டம் நவம்பர் 2-ம் தேதி தொடங்கப்பட்டது. பிஎஸ்எஃப்-ன் இந்த முயற்சிக்கு கிராம மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு சுஜீத் குமார் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.