மட்டக்களப்பு கெம்பஸ் ஸ்ரீலங்கா தனியார் கல்வி நிறுவனம் பொதுப் பயன்பாட்டின் பின்னர் மீளக் கையளிப்பதற்காக நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு கெம்பஸ் ஸ்ரீலங்கா தனியார் கல்வி நிறுவனத்தை பொதுப் பயன்பாட்டின் பின்னர் அதன் உரிமையாளர் எம் எல் ஏ ஹிஸ்புல்லா விடம் நிறுவனத்தின் திறப்பை மீண்டும் கையளிக்கும் நிகழ்வு (4) மட்டக்களப்பு, புனானை யில் அமைந்துள்ள நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தனியார் நிதிப் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் குண்டுத்தாக்குதல் காலப்பகுதியில் சர்ச்சைக்குள்ளானதுடன், இராணுவ கட்டுப்பாட்டின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகள் கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக செயல்பட்டு வந்தது. மீண்டும் அதன் கல்விச் சேவைகளை எஸ் எல் ரி கெம்பஸ்ஸுடன் இணைந்து செயல்படுவதற்காக அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்;
“ஜனாதிபதி நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக சகல வழிகளிலும் முயற்சி செய்து வருகிறார். என்னால் முடியும் என்ற உந்துதலுடன் ஜனாதிபதி சகல பொறுப்புகளையும் தாமாகவே பொறுப்பெடுத்து, இலங்கை நாட்டின் அபிவிருத்திக்காக செயல்படுகிறார். அந்த வகையில் பங்களாதேஷ் நாட்டுக்கான கடனை பூரணமாக செலுத்தி உள்ளார்.
இந்த கல்வி நிறுவனம் 2000 தொடக்கம் 3000 பட்டதாரிகளை
நீண்டகால நோக்குடன் உள்வாங்கக் கூடியது. இதனை கொழும்பில் அமைத்திருந்தால் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை வருமானமாக ஈட்டியிருக்கலாம். கடந்த கால துரதிஷ்டவசமான நிலை காரணமாக அது தடைப்பட்டிருந்தாலும், இந்நிறுவனம் சேவை நோக்கில் இந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு வருடாந்தம் 10,000 பட்டதாரிகளை வெளியேற்றக் கூடிய வசதிகள் காணப்படுகின்றன.
ஜனாதிபதி எப்போதும் கல்வி செயற்பாடுகளை மிகவும் ஆதரிக்க கூடியவர். அதனால் இந் நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மீளக் கையளித்துள்ளார்.
சமூக ஒற்றுமையை நோக்காக கொண்ட இந்த நிறுவனம் நாட்டை விரும்புகின்ற நாட்டிற்காக செயல்பட வேண்டும் எனும் எண்ணமுடைய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை குறைந்த கட்டணத்தில் கல்வியைக் கற்று பட்டதாரிகளாக ஆக்குவதற்காக எதிர்பார்க்கிறது” எனக் குறிப்பிட்டார்.
இதன்போது உரையாற்றிய மட்டக்களப்பு கெம்பஸ் தனியார் நிறுவனத்தின் ஸ்தாபகர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் தமது கல்வி நிறுவனத்தை மீளக் கையளித்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், ஜனாதிபதி சார்பில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன் பிராந்தியத்தில் உள்ள பொலன்னறுவை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பதுளை போன்ற மாவட்டங்களின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிற்சங்கைக்கு ஏற்றவாறு உருவாக்குவதற்காகவே ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
புலமைப் பரிசில் திட்டங்களுக்கு ஊடாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் ஊவா, அனுராதபுரம், தம்புள்ளை போன்ற பகுதி மாணவர்களும் இலகுவாக வந்து செல்லும் நோக்கில் செங்கலடி பதுளை வீதியை சவூதி அரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் அபிவிருத்தி செய்ததாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் நிறுவனத்தின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதத்தில் மாணவர்கள் உள்வாங்கப்பவுள்ளதுடன் பெப்ரவரி மாதத்தில் உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகளுக்கான ஆரம்ப வைபவம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எஸ் எல் ரி கெம்பஸுடன் இணைந்து செயற்படவுள்ள மட்டக்களப்பு கெம்பஸ் தனியார் கல்வி நிறுவனம் தகவல் தொழில்நுட்பம், விவசாயம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் போன்ற துறைகளில் படிப்புகளுடன் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதுடன் உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்களையும் வரவழைத்து இணைத்து, மறுபக்கத்தில் நாட்டிற்கு வருமானத்தை ஈட்டிக் கொடுப்பதையும் நோக்காக கொண்டு செயல்பட விருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகம், அரசாங்க தகவல் திணைக்களம் என்பவற்றின் உயர் அதிகாரிகள், எஸ் எல் ரி மற்றும் மட்டக்களப்பு கெம்பஸ் ஆகியவற்றின் உபவேந்தர்கள், ஊழியர்கள், வாழைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர், பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி, ஊடகவியலாளர்கள் என பலர் பங்கேற்றனர்.