புதுடெல்லி: வாழ்த்த வேண்டி தாயின் கைகளிலிருந்து திருநங்கை வாங்கியபோது கீழே விழுந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் முராதாபாத்தின் புதான்பூர் கிராமத்தில் உள்ள திலாரி காவல் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இங்கு வசிக்கும் சதால் அலிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. அநாரியா எனப் பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையின் தந்தை தனது பணியின் காரணமாக ஹரித்துவாருக்கு சென்றிருந்தார். அவரின் பெற்றோர்களும் வெளியில் சென்றிருக்க வீட்டில் மனைவி தன் குழந்தையுடன் இருந்துள்ளார்.
அப்போது குழந்தையை வாழ்த்திவிட்டு பரிசுப் பணம் பெற ஒரு திருநங்கை அக்கிராமத்து வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், வீட்டில் யாரும் இல்லாததால் தன்னால் பரிசுப் பணம் எதுவும் தர இயலாது எனவும், பிறகு வரும்படியும் சதால் அலியின் மனைவி கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த அந்த திருங்கை வாழ்த்த வேண்டி, அந்தத் தாயிடமிருந்து பலவந்தமாகக் குழந்தையை வாங்கியுள்ளார். இதில், திருநங்கையின் கை தவறி பச்சிளம் குழந்தை அநாரியா தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் அக்குழந்தையின் தலையில் பட்ட அடியால், மறுகணமே உயிர் பிரிந்துள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சதால் அலி, அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உடலை உடற்கூறு பரிசோதனைக்கும் அனுப்பினர். இந்த வழக்கில் ஆய்வாளர் ஹிமான்ஷு சிங், கிராமத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
இதுபோல், புதிதாகப் பிறந்த குழந்தையை கையில் எடுத்து ஆடிப்பாடி வாழ்த்தி பணத்தை பரிசாக திருநங்கைகள் பெறுவது வழக்கம். இதில், சிலர் பணம் பறிக்கும் வகையிலும் நடந்து கொள்வதும் உண்டு. அப்படியிருக்கையில், புதான்பூர் கிராமத்தின் இந்தச் சம்பவம் ஒரு பச்சிளம் குழந்தையின் உயிரையே பலி வாங்கிவிட்டது. இதில், சாட்சிகளைப் பொருத்து தனது கைது நடவடிக்கை இருக்கும் என உ.பி போலீஸார் கூறியுள்ளனர்.