மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசு, கடந்த 2018-ல் `தேர்தல் பத்திரம்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின்படி, தனிநபரோ, ஒரு நிறுவனமோ பணத்தை வங்கி மூலம் தேர்தல் பத்திரமாகப் பெற்று, அதை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இருப்பினும், இதில் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்பது ரகசியமாக வைக்கப்படுகிறது.

இதனால், ஜனநாயக நாட்டில் எந்தக் கட்சிக்கு யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்பது வெளிப்படையாக இருக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் இந்த திட்டத்துக்கு எதிராக மனுக்கள் தொடரப்பட்டன. அதுதொடர்பான மனுக்கள் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில், `அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரம் குறித்து அறிய சாமானிய மக்களுக்கு உரிமையில்லை’ என மத்திய அரசு தெரிவித்தது. மத்திய அரசின் இத்தகைய வாதத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தன.

அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு இவ்வாறு கூறியிருப்பது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்து தெரிந்துகொள்ள, சாமானிய மக்களுக்கு உரிமை இல்லை என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வைத்திருக்கும் வாதம்’ என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, `சரி, தவறு, கருத்து இல்லை’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக `93 சதவிகிதம் பேர் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்து தெரிந்துகொள்ள, சாமானிய மக்களுக்கு உரிமை இல்லை எனும் மத்திய அரசின் வாதம் தவறு’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 6 சதவிகிதம் பேர் மத்திய அரசின் வாதத்தை சரி என்றும், 1 சதவிகிதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.