புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார்: ஆதரவாளர்கள், பொதுமக்கள் அஞ்சலி

புதுச்சேரி: புதுவை முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் காலமானார். அவருக்கு வயது 74. புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புதுவை அரசியலில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவர் ப.கண்ணன். பேரவைத் தலைவர், அமைச்சர், மாநிலங்களவை எம்பி என பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2021 சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவிலிருந்த அவர், அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகியிருந்தார். மணிப்பூர் கலவரத்தின்போது பாஜகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

கடந்த 1-ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக ப.கண்ணன் மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (நவ.5) அவர் இறந்தார்.

காங்கிரஸ், தமாகா, அதிமுக, பாஜக: மறைந்த ப.கண்ணனுக்கு வயது 74. தனது இளமை பருவத்திலிருந்து காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக ப.கண்ணன் பணியாற்றினார். காங்கிரஸுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பாதயாத்திரை நடத்தியவர்.

தமிழகத்தில் மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கிய போது ப.கண்ணன் புதுவையில் தமாகாவை தொடங்கினார். புதுவை மக்கள் காங்கிரஸ், புதுவை முன்னேற்ற காங்கிரஸ் என 3 முறை தனிக்கட்சி தொடங்கி பின் காங்கிரசில் இணைந்தார். இதன்பிறகு காங்கிரஸிலிருந்து முற்றிலுமாக விலகி அதிமுகவில் இணைந்து புதுவை மாநில தேர்தல் பிரிவு செயலாளராக பணியாற்றினார்.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்தார். மணிப்பூர் கலவரத்தின்போது பாஜகவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அதன் பின் தீவிர அரசியலில் இருந்து விலகினார்.

மறைந்த ப.கண்ணன் உடல் நேற்று இரவு புதுவை வைசியாள் வீதியில் உள்ள அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. ப.கண்ணன் இறந்த தகவல் கிடைத்தவுடன் புதுவை மாநிலம் முழுவதும் உள்ள அவரின் ஆதரவாளர்கள் .கண்ணன் வீட்டில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.