சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரிக்கப்பால் மக்கள் அதிக அளவில் மோசடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு லிங்க் அனுப்பி உங்களது கெ.ஒய்.சி.யை நிரப்புங்கள் என்று சொல்கிறார்கள். அந்த லிங்க்கை கிளிக் செய்தால் கிளிக் செய்பவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை அபகரித்து வருகின்றனர். இது போன்ற பல மோசடிகள் நடந்து வருகிறது. இதே போன்று பொருளாதார குற்றங்களும் மும்பையில் அதிகரித்துள்ளது.
மும்பையில் கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து இதுவரை மும்பையில் 594 பொருளாதார குற்றங்கள் நடந்திருக்கிறது. இதில் 59,000 கோடி மோசடி நடந்திருக்கிறது. இக்குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்களில் வெறும் 14 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். 319 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாமல் கோர்ட் மூலம் விடுவிக்கப்பட்டுவிட்டனர். 264 வழக்குகளில் மட்டும் தான் போலீஸார் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்து இருக்கின்றனர். 59,000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கும் நிலையில் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெறும் 37.24 கோடி மட்டுமே திரும்ப கிடைத்திருக்கிறது.

அதிகமான வழக்குகளில் குற்றவாளிகளுடன் போலீஸ் அதிகாரிகள் தொடர்பு வைத்துக்கொண்டு வழக்கு விசாரணையை இழுத்தடிப்பது மற்றும் சாட்சியங்களை சேகரிப்பதில் அலட்சியம் காட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. அவ்வாறு நடந்து கொண்ட மும்பை போலீஸ் துணை கமிஷனர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இலாகாபூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ”பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் போது ஒவ்வொரு அம்சங்களையும் ஆய்வு செய்யவேண்டியிருக்கிறது. ஆவணங்களை சேகரித்து அதனை சரிபார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது. அதோடு பெரும்பாலான குற்றங்களில் பிரபலமான பில்டர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பு கொண்டு இருக்கின்றனர். எனவே பொருளாதார குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது மொக்கா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றார்.
இது போன்ற பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக 93 பேர் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் போலீஸார் விசாரணை தாமதம் அடைவதற்கு பணிசுமையும் ஒரு காரணம் என்று குறிப்பிடுகின்றனர். பஞ்சாப், மகாராஷ்டிரா வங்கியில் 7 ஆயிரம் கோடி மோசடி நடந்தது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2019-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில் விசாரணை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. காக்ஸ் அண்ட் கிங்ஸ் நிறுவனத்திற்கு 2,500 கோடி ரூபாய் வங்கிகள் கடன் கொடுத்திருந்தன.

அந்த பணம் திரும்ப கொடுக்கப்படாததால் அது தொடர்பான வழக்கையும் மும்பை பொருளாதார குற்றப்பிரிவுதான் விசாரிக்கிறது. மும்பை மாநகராட்சியில் 12,500 கோடி ஊழல் நடந்திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மற்றும் கொரோனா காலத்தில் நடந்ததாக கூறப்படும் 60 கோடி ரூபாய் ஊழல் என பொருளாதார குற்றங்களின் எண்ணிக்கையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
ஆனால் இவ்வழக்குகளை விசாரிக்க ஆள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு மட்டத்தில் இருந்து வரும் நெருக்கடிகளும் காரணமாக இருக்கிறது என்று போலீஸார் குறைபட்டுக்கொண்டுள்ளனர். இதில் ஆன்லைன் மோசடிகளை சைபர் பிரிவு போலீஸார் தனியாக விசாரித்து வருகின்றனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.