வட கொரியாவை கண்காணிக்க முதல் உளவு செயற்கைக்கோள்… நாள் குறித்த தென் கொரியா

சியோல்,

தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியோன் ஹா கியூ இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘தென் கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வரும் நவம்பர் 30 ஆம் தேதி அன்று கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது’ என்றார்.

வடகொரியா தனது எதிரிகளை குறிவைத்து அணு ஆயுதங்களை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், வட கொரியாவை சிறப்பாக கண்காணிக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் உளவு செயற்கைக்கோள் இதுவாகும். இந்த செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் (Falcon 9 rocket) சுமந்து செல்லும்.

ஸ்பேஸ் எக்ஸ் உடனான ஒப்பந்தத்தின் கீழ், தென் கொரியாவின் பாதுகாப்பு கையகப்படுத்தல் திட்ட நிர்வாகத்தின்படி, தென் கொரியா மேலும் நான்கு உளவு செயற்கைக்கோள்களை 2025க்குள் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

தற்போது தென் கொரியாவிடம் எந்த ஒரு உளவு செயற்கைக்கோளும் இல்லாதலால் வடகொரியாவின் நகர்வுகளை கண்காணிக்க அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோளின் உதவியையே நம்பியுள்ளது.

தனக்கென சொந்த உளவு செயற்கைக்கோளை வைத்திருப்பதால் வடகொரியாவின் நகர்வுகளை கண்காணிப்பது சுலபமாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவின் மூன்று அம்ச பாதுகாப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் – முன்னெச்சரிக்கை தாக்குதல், ஏவுகணை பாதுகாப்பு மற்றும் பதிலடி நடவடிக்கைகள் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று தென் கொரியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் லீ சூன் கியூன் கூறுகிறார்.

“அமெரிக்க உளவு செயற்கைக்கோள்கள் அதிக தெளிவுத்திறன் கொண்ட படங்களை உருவாக்குகின்றன. ஆனால் அவை தென் கொரியாவின் நோக்கங்களுக்காக அல்லாமல், அமெரிக்க மூலோபாய நோக்கங்களின் கீழ் இயக்கப்படுகின்றன.

மேலும் அமெரிக்கா சில சமயங்களில் தென் கொரியாவுடன் மிகவும் முக்கியமான தகவல்களுடைய செயற்கைக்கோள் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில்லை” என்றும் லீ சூன் கியூன் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு, தென் கொரியா உள்நாட்டு ராக்கெட்டை பயன்படுத்தி செயல்திறன் கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது. அத்துடன் அதன் சொந்த தொழில்நுட்பத்துடன் ஒரு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய 10-வது நாடு என்ற பெருமையை பெற்றது.

வட கொரியாவும் தனது சொந்த உளவு செயற்கைக்கோளை செலுத்த ஆர்வமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதன் இரண்டு ஏவுகணை முயற்சிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வியில் முடிந்தன.

அக்டோபரில் மூன்றாவது முயற்சியை மேற்கொள்வதாக வடகொரியா கூறியிருந்தது. ஆனால் இன்னும் அது குறித்த செய்திகள் அந்நாட்டு அரசு ஊடகத்தின் பதிவுகளில் இடம்பெறவில்லை என்று தெரியவருகிறது.

வட கொரியா தனது உளவு செயற்கைக்கோள் ஏவுதல் திட்டத்திற்கு ரஷிய தொழில்நுட்ப உதவியை பெறக்கூடும் என தென் கொரியாவின் உளவு அமைப்பு, கடந்த வாரம் எம்.பி.களிடம் தெரிவித்தது.

வடகொரியா உளவு செயற்கைக்கோளை செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இது வெற்றிகரமாக இருக்கும் என்றும் தேசிய புலனாய்வு கூறியுள்ளது.

உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு வெடிமருந்துகள், ராக்கெட்டுகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்களை வழங்குவதற்கு ஈடாக, வட கொரியா தனது ஆயுத திட்டங்களை நவீனமயமாக்க ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன ஆயுத தொழில்நுட்பங்களை நாடுவதாக தென் கொரியா, அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு அரசாங்கங்கள் நம்புகின்றன.

ரஷ்யாவும் வடகொரியாவும் ஆயுத பரிமாற்ற ஒப்பந்தத்தை ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.