வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ‘ கவர்னர்கள், தாங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் ‘ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
பஞ்சாபில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கும், அம்மாநிலத்தை ஆளும் பக்வந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க மறுப்பதாகவும், சட்டசபையை கூட்டுவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று (நவ.,06) உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கவர்னர் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜர் ஆனார்.
அப்போது, சந்திரசூட் கூறியதாவது: ” மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு, நீதிமன்றங்களை நாட வேண்டுமா? இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னரே கவர்னர் பணியாற்றி இருக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத்திற்கு வழக்குகள் வரும் போது மட்டுமே கவர்னர்கள் செயல்படும் விதத்தை தவிர்க்க வேண்டும். கவர்னர்கள் கொஞ்சம் ஆன்மாவை தேட வேண்டும். தாங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் அல்ல என்பதை உணர வேண்டும்” என்றார்.
சொலிசிட்டர் ஜெனரல் கூறும் போது, ” தன்னிடம் வந்த மசோதாக்கள் குறித்து கவர்னர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும். பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மனு தேவையற்ற சட்ட நடவடிக்கை ” எனக்கூறினார்.
இதனைத் தொடர்ந்து சந்திரசூட் கூறுகையில், ” கவர்னர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் கூறியுள்ளார். சில நாட்களில் அது குறித்த அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறியுள்ளார். இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும். அன்று கவர்னர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றம் ஆய்வு செய்யும் எனக்கூறி, வழக்கை நவ.,10க்கு ஒத்தி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement