வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:நம் நாட்டின் மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா, 63, பதவியேற்றார்.
மத்திய தகவல் ஆணைய தலைவராக பதவி வகித்து வந்த ஒய்.கே. சின்ஹாவின் பதவி காலம், கடந்த அக்டோபரில் நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக, அந்த பதவி காலியாகவே இருந்தது.
இதையடுத்து, தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஹீராலால் சமாரியா பதவியேற்றுக் கொண்டார்.
புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஹீராலால் சமாரியா ராஜஸ்தானைச் சேர்ந்தவர். இவர், மத்திய உரம் மற்றும் வேதிப்பொருட்கள் துறையின் இணைச் செயலராகவும், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலராகவும் பணியாற்றியவர்.
கடந்த 2005-ல் துவங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ள முதல் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையை ஹீராலால் சமாரியா பெற்றுள்ளார். மத்திய தகவல் ஆணையம், தலைமை தகவல் ஆணையாளர் ஒருவரின் தலைமையில் செயல்படுவதுடன் அதிக அளவாக, 10 தகவல் ஆணையர்களை கொண்டிருக்கும். இந்த ஆணையத்தில் இரண்டு தகவல் ஆணையர்கள் தற்போது பதவியில் உள்ளனர்.
மத்திய தகவல் ஆணைய தலைவராக ஹீராலால் பதவியேற்றபோதிலும், தகவல் ஆணையர்களுக்கான எட்டு பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம், காலியான பதவிகளை நிரப்பும்படி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது. இல்லையெனில், தகவல் அறியும் உரிமை சட்டம் செயலற்றதாகிவிடும் என தெரிவித்து இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement