புதுடில்லி :’அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் மறு விசாரணை செய்வதற்கு, எந்த தடையும் விதிக்க முடியாது’ என, உச்ச நீதிமன்றம் உறுதிபட தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற நடவடிக்கை சரியானது எனக்கூறி, அதில் குறுக்கிட மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், அமைச்சர் மீதான வழக்கை தாமாக விசாரிக்க முன்வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி, 1996 – 2001 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார்.இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக, 1.4 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிராக, 2002ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு, வேலுார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவியை விடுதலை செய்து, வேலுார் மாவட்ட முதன்மை நீதிமன்றம்,இந்தாண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
சட்ட மீறல்கள்
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கைவிசாரணைக்கு எடுத்து, கடந்த ஆகஸ்டில் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் முதலில் இருந்தே பல சட்ட மீறல்கள் நடந்துள்ளன. விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி முன் இருந்த இந்த வழக்கு, வேலுார் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது. இதில், எந்த சட்ட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. நீண்ட காலமாக இந்த வழக்கு, வேலுார் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துள்ளது.
இந்தாண்டு ஜூன் மாதத்துடன், வேலுார் மாவட்ட முதன்மை நீதிபதி ஓய்வு பெறுவதாக இருந்த நிலையில், ஜூன் 6ம் தேதி இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 6ல் விசாரணை துவங்கி, ஜூன் 23ம் தேதி அனைத்து தரப்பு ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அசுர வேகத்தில், 172 சாட்சிகள், 381 ஆவணங்கள் விசாரிக்கப்பட்டு, 226 பக்க தீர்ப்பு, ஜூன் 28ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இது, நீதித் துறையில் இல்லாத அசுர வேகம்.
மேல்முறையீடு
இதிலிருந்தே, இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என்பது உறுதியாகிறது. எனவே, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு குறித்து, பொன்முடி மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தார். இதை எதிர்த்து, அமைச்சர் பொன்முடி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுதலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
பொன்முடி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதிட முற்பட்டனர். ஆனால், அதை அமர்வு ஏற்கவில்லை. உயர் நீதிமன்ற நீதிபதி முன், வாதங்களை வைத்துக் கொள்ளும்படி நீதிபதிகள் தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கூறியதாவது:நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள், நமக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிப்போம். இந்த வழக்கை, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு மாற்றி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக ரீதியில் இவ்வாறு மாற்ற, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. நீதித்துறை உத்தரவாக மட்டுமே பிறப்பிக்க முடியும்.
அதனால், இந்த வழக்கை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆய்வு செய்வது சரியே. தற்போது தான் விசாரணை துவங்கியுள்ளது. பொன்முடி மற்றும் மாநில அரசுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க விரும்பவில்லை. உயர் நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீசில் குறுக்கிடவும் விரும்பவில்லை. மனுதாரர்கள் தங்கள் தரப்பு வாதத்தை, உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
நில அபகரிப்பு தொடர்பான வழக்கில், அமைச்சர் பொன்முடி சமீபத்தில் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில், மணல் ஒப்பந்தம் தொடர்பான மோசடியில் நடந்துள்ள சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம் சிகாமணிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ., போராட்டத்திற்கு கிடைத்தது வெற்றி!
தி.மு.க., அமைச்சர்கள் பொன்முடி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான ஊழல் வழக்கு விசாரணையில், தமிழக பா.ஜ., சார்பில் உச்ச நீதிமன்றத்தில், ‘கேவியட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் தர்மத்தை நிலைநாட்டி, தி.மு.க.,வின் அராஜகத்தை கண்டித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ‘நீதிக்காகவும், நேர்மைக்காகவும் பாடுபடும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர், நீதித் துறையில் இருக்க கடவுளுக்கு நன்றி’ என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மற்றொரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிலும், அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் கண்டிக்கப்பட்டுள்ளன.தி.மு.க.,வின் அதிகார அத்துமீறல்களை கண்டித்த உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகள், நியாயத்திற்கான பா.ஜ.,வின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. – அண்ணாமலை,தமிழக பா.ஜ., தலைவர்.
செம்மண் குவாரி வழக்கு அரசு தரப்புக்கு கேள்வி
விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்தில் அரசு செம்மண் குவாரியில் விதிமுறை மீறி செம்மண் எடுத்ததாக 2012ல், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு தரப்புக்கு உதவியாக, விசாரணைக்கு தங்களையும் அனுமதிக்க கோரி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்., 8ம் தேதி மனு தாக்கல் செய்தார்.இது குறித்து, அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், சதானந்தன், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகியோர் மட்டும் ஆஜராகினர்.விசாரித்த நீதிபதி பூர்ணிமா, ”ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீது, அரசு தரப்பில் இதுவரை ஏன் ஆட்சேபனை குறித்த பதில் மனு தாக்கல் செய்யவில்லை. ஏன் தாமதப்படுத்துகிறீர்கள்.
ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?”வழக்கை விரைந்து முடிக்க ஒத்துழைக்காமல், தாமதம் செய்வதால் சந்தேகம் ஏற்படுகிறது’ என, கண்டிப்புடன் கேள்வி எழுப்பினார்.பின், வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்த அவர், ”அன்றைய தினம், அரசு தரப்பில் ஆட்சேபனை குறித்து மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், மேல் நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்,” என, உத்தரவிட்டார்.
வளர்மதிக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 4ல் விசாரணை துவக்கம்
சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் வளர்மதியை விடுவித்த உத்தரவை, தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்த வழக்கின் விசாரணையை, டிசம்பர் 4க்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் விடுவித்து, 2012ல் உத்தரவிட்டது. இதை மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு
எடுத்தார்.இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வளர்மதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், ”தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
”அந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சில, பதிவுத் துறையிடம் இருந்து பெற வேண்டியதுள்ளன,” என்றார்.
இதையடுத்து, விசாரணையை, டிசம்பர் 4க்கு தள்ளி வைத்து, அன்று வாதங்களை துவக்கவும், நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுஉள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்