புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயிலுக்கு வருமாறு ஜனவரி 1 முதல் 15 வரை பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் பூஜ் நகரில் ஆர்எஸ்எஸ் செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபாலே செய்தியாளர்களிடம் கூறியது: 2024 ஜனவரி 1 முதல் 15 முடிய ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கிராமங்களுக்குச் சென்று இல்லந்தோறும் மக்களை சந்திக்க இருக்கின்றனர். அப்போது, ஶ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வழங்கியுள்ள ஃபோட்டோவுடன், அங்கு பூஜை செய்யப்பட்ட அட்சதைகளை எடுத்துக் கொண்டு அயோத்தி ஶ்ரீராம ஜன்ம பூமி ஆலயத்தையும், ஶ்ரீராம் லல்லாவையும் தரிசிக்க வருமாறு பல லட்சக்கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்க இருக்கிறார்கள்.
ஶ்ரீராம ஜன்ம பூமி ஆலயப் போட்டோவும் பூஜை செய்த அட்சதையும் அனைத்து மாநிலங்களுக்கும் ஆர்எஸ்எஸ் சார்பில் வழங்கப்பட்டுவிட்டன. அயோத்தி ராமர் ஆலயம் அமைப்பதற்கு நிதி சேகரிப்பதற்காக 4.5 முதல் 5 லட்சம் கிராமங்களை 45 நாட்கள் தொடர்பு கொண்டோம். தற்போது நேரம் குறைவாக இருப்பதால் 15 நாட்கள் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஶ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை திட்டமிட்டுள்ள இந்நிகழ்ச்சி வெற்றி பெற ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உதவிட உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.