தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க-வா, பா.ஜ.க-வா என்று விவாதங்கள் நடத்தும் அளவுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக அரசியல் செய்துகொண்டிருக்கிறது தமிழக பாஜக. பல சமயங்களில் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சிகள் என்ற எல்லைகளை மீறி, எதிரிகளாகவே மாறிவிட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதில் ஆளுநரின் பேச்சுக்கள், செயல்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. சனாதனம் குறித்த பேச்சுக்கள் இப்போது தேசிய அளவில் விவாதமாகியிருக்கின்றன. அதற்கு மூல காரணம் அமைச்சர் உதயநிதியின் பேச்சுதான் என்றால், அமைச்சரின் பேச்சுக்கு பின்னால் இருந்தது ஆளுநரின் செயல்பாடுகள்தான்.
தொடர்ச்சியாக செல்லும் இடங்களில் எல்லாம் சனாதன தர்மம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிக்கொண்டிருந்தார். அதற்கு தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் பதில் கொடுத்துக்கொண்டே இருந்தன. தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சனாதன குறித்த பதில் விமர்சனங்களுக்கு, ஆளுநர் எங்கும் பதில் சொல்லவில்லை. ஆனால் ஆளுநருக்கு பதிலாக அந்த வேலையை பா.ஜ.க கையில் எடுத்துக்கொண்டது.

சனாதன தர்மம் என்றால் என்ன, அதனை பாஜக உயர்த்திப்பிடிப்பது ஏன் என்றெல்லாம் பாஜக தலைவர்கள் விளக்கம் கொடுத்தனர். சமீபத்தில் கூட ஆளுநர் மாளிகை முன்பு ரெளடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதை அடுத்து, ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அறிக்கைகள் சர்ச்சைகளைக் கிளப்பின. அரசியல் நெடியோடு அரசாங்கத்தை விமர்சித்து வெளியிடப்பட்ட ஆளுநர் மாளிகையின் அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜக வழக்கறிஞர்தான் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்தார்.
பாஜக வழக்கறிஞரால் ஜாமீன் எடுக்கப்பட்ட நபர்தான் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசினார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாய் பரவ, பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தவர் இப்போது கட்சியிலேயே இல்லை, அவர் தொழில் ரீதியாக உதவியிருக்கிறார், திமுகவினருக்குத்தான் இதில் தொடர்பு இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுத்து விமர்சனங்களை சமாளித்தது பாஜக.
அதேபோல எழுவர் விடுதலை, ஆன்லைன் ரம்மி தடை மசோதா என பல மசோதாக்களுக்கு கையெழுத்திட முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அமைதியாக இருந்தார். அவருக்காக தி.மு.க-வுடன் வார்த்தைப் போர் நடத்தியது பாஜகதான். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தவுடன், அவரை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் அறிவித்தார். ஆளுநரின் அச்செயல் பா.ஜ.க-வுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும், இதற்கெல்லாம் சட்டத்தில் இடம் இருக்கிறதா? மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? என்றெல்லாம் பா.ஜ.க-வினரே குழம்பிவிட்டனர். ஆனால் உடனடியாக அந்த உத்தரவை வாபஸ் பெற்றார் ஆளுநர். டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள்படியே வாபஸ் பெற்றார் என்றும் சொல்லப்பட்டது.

இப்படி ஆளுநரின் பேச்சுக்கள், செயல்பாடுகள் பல சமயங்களில் பா.ஜ.க-வின் பிரசாரங்களுக்கு வலுவான முன்னெடுப்பாகவும் இருந்திருக்கிறது, சில சமயங்களில் தடுப்பாட்டம் ஆட வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே ஆளுநரின் செயல்பாடுகள்தான் தி.மு.க- பா.ஜ.க மோதல்கள் அதிகரிக்க காரணமா என்று கமலாலய வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஆளுநர் ஆர்.என்.ரவி, ஐ.பி.எஸ் அதிகாரியாக நேர்மையோடு சேவையாற்றியவர். நாகாலாந்து மாநில பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர கடுமையாகப் பாடுபட்டவர். தமிழ்நாட்டின் ஆளுநராக அவரை நியமித்தபோதே, பா.ஜ.க, இந்து அமைப்பினர்கள் வெகுவாக வரவேற்றோம். காரணம், அவர் மிகப்பெரிய தேசியவாதி. தமிழ்நாட்டில் பேசப்படுகிற திராவிடம் என்பது ஒரு குறுகிய வட்டம். தேசியம் என்பது பரந்துபட்ட சிந்தனை. ஆளுநரின் பேச்சுக்கள் தேசிய உணர்வை ஊட்டும் விதமாகத்தான் இருக்கிறதே தவிர, அது தி.மு.க என்ற தனிப்பட்ட கட்சிக்கு எதிராக அல்ல. இது புரியாமல் தி.மு.க-வினர்தான் ஆளுநருக்கு எதிராக அரசியல் செய்கின்றனர். ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளையும் மறுக்கின்றனர். அதனால்தான் ஆளுநருக்கு ஆதரவாக பா.ஜ.க பேசுகிறது” என்கின்றனர்.
ஆனால் வேறு சில பா.ஜ.க சீனியர்களோ, “ஆளுநர் பேசுவதெல்லாம் சரிதான். ஆனால் இடம், பொருள் என ஒன்று இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கேற்ப சில விஷயங்களை பக்குவமாகப் பேச வேண்டியிருக்கும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று ஆளுநர் பேசினால், அது நேரடியாக பா.ஜ.க-வைத்தான் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்று எங்கள் மாநிலத் தலைவரே அறிவுறுத்தினார். மாணவர்கள், பல்துறை சார்ந்த நிபுணர்கள், அறிஞர்களோடு உரையாற்றுவதற்கான வாய்ப்பு எங்களை விட ஆளுநருக்குத்தான் அதிகம் இருக்கிறது. அப்போது பாரத கலாசாரத்தின் பெருமைகளை எடுத்துரைக்கலாம். விடுதலைக்காக பாடுபட்ட தேசத் தலைவர்களின் பெருமைகளை எடுத்துச்சொல்லி தேசப்பற்றை வளர்க்கலாம். அதுதான் பயன் கொடுக்கும். மற்றபடி தி.மு.க-வை எதிர்க்க வேண்டிய அவசியமோ, தேவையோ ஆளுநருக்கு இல்லை. நாங்கள் அதனைப் பார்த்துக்கொள்வோம்.” என்கின்றனர்.

ஆனால் இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் கேட்டபோது, “ஆளுநர் பேசுவதைத்தான் பாஜக பேசுகிறது. பாஜக பேசுவதைத்தான் ஆளுநர் பேசுகிறார். பாஜக சொல்லாமல் ஆளுநர் எதையாவது செய்துவிடுவாரா? அல்லது செய்யதான் முடியுமா? அப்படி பாஜக சொல்லாமல் எதையாவது ஆளுநர் செய்துவிட்டால் மறுநாள் அவரை பதவியில் விட்டு வைத்திருப்பார்களா? அந்தத் தெளிவு எங்களுக்கு இருப்பதால்தான், ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம் போல செயல்படுகிறது என்று எங்கள் தலைவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.
எனவே ஆளுநரால்தான் திமுகவை பாஜக எதிர்க்கிறது என்ற சித்தரிப்பு அவசியமற்றது. தமிழ்நாடு திராவிடக் கட்சிகள் அடித்தளத்தில் 50 ஆண்டுகளாக வலுவாக இருக்கிறது. அண்ணா, கலைஞருக்குப் பிறகு திமுகவுக்கு தளபதி ஸ்டாலின் என்ற வலுவான தலைவர் இருக்கிறார். ஆனால் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு அதிமுகவுக்கு அப்படி பலமான தலைவர் இல்லை. அதனால் அதிமுக-வை விழுங்கி, அந்த இடத்தை பிடிக்க பாஜக முயற்சிக்கிறது. இதனால் பெரிய எதிர்க்கட்சி அவர்கள்தான் என்பதுபோல காட்டிக்கொள்ள பாடுபடுகிறார்கள். அதற்கு ஆளுநரும் ஒத்தாசையாக இருக்கிறார். இவர்களாகவே இப்படி தாங்கள்தான் பெரிய எதிர்க்கட்சி காட்டிக்கொண்டால் மட்டும் போதாது, மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அது தமிழ்நாட்டில் ஒருபோதும் நடக்காது” என்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.