உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கு எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் கி.வெங்கடராமன் எழுதிய ‘செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு தமிழர் கிராமங்கள் அழிப்பு’ என்ற நூல் திறனாய்வு விளக்கக் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
மகளிர் ஆயம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மகளிர் ஆயம் தலைவர் அருணா, துணைத்தலைவர் க.செம்மலர், பொதுச்செயலாளர் மு.செந்தமிழ்ச்செல்வி, மரபு வேளாண் அறிஞர் பாமயன் (தாளாண்மை உழவர் இயக்கம் ), தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் மற்றும் சில உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கருத்தரங்கில் மகளிர் ஆயம் பொதுச் செயலாளர், மு.செந்தமிழ்ச் செல்வி பேசியதாவது, “பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய, பொது விநியோக அமைப்பு (பி.டி.எஸ்) மற்றும் மத்திய உணவு பாதுகாப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

செறிவூட்டப்பட்ட அரிசி (போர்டிபைடு அரிசி) என்பது செயற்கையாக சத்து கூட்டப்பட்ட அரிசியாகும். இந்த அரிசியில் போலிக் அமிலம், இரும்புச்சத்து , வைட்டமின் பி-12 போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும். இந்த மூன்று சத்து குறைபாடும் இந்தியாவில் பரவலாக இருப்பதால்தான் செறிவூட்டப்பட்ட அரிசி கொண்டு வரப்பட்டுள்ளது என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் (FSSAI) 2018-ல் அறிவித்தது. சத்துக் குறைபாடு உள்ளவர்கள் மட்டும் இந்த அரிசியை பயன்படுத்தலாம் என்ற விதிமுறையையும் கூறியது. இந்த திட்டத்தை செயல்படுத்த முன்னோட்டமாக திருச்சி மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த செறிவூட்டப்பட்ட அரிசியை நீண்டகால சோகை, காசநோய் உள்ளவர்கள், மலேரியாவில் இருந்து மீண்டவர்கள் ஆகியோர் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. மக்களின் கருத்து மற்றும் எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்படாமல் மனிதர்களுக்கு நேரடியாக இந்த அரிசி வழங்கப்படுகிறது. இதைச் சாப்பிடும் மனிதர்கள் என்ன சோதனை எலிகளா?

இந்த திட்டத்தில் டாடா அறக்கட்டளை, கெயின் (GAIN), பாத் (PATH) போன்ற நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன. பாத் நிறுவனம் லாபத்திற்காக குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கியது. இதனால் ஆந்திரா மற்றும் குஜராத்தில் 12 குழந்தைகள் இறந்தனர். நாடாளுமன்றம் விசாரிக்கும்போது பாத் என்ற அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட நிறுவனம் இத்தகைய திட்டத்தில் இணைவது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்த திட்டத்திற்கு செலவிடும் 3,000 கோடியை மரபு (பாரம்பர்ய) விவசாயத்தை மீட்டெடுக்கும் விவசாயிகளுக்காக தனி நலத்திட்டங்கள் செய்திட உதவலாம்” என்று பேசினார்.

மரபு வேளாண் அறிஞர் பாமையன் கூறியதாவது, “பன்னாட்டு நிறுவனங்கள் உணவின் மீது நடத்தக்கூடிய மிகப்பெரிய தாக்குதலைப் பற்றி பேசக்கூடிய நிலை இன்றுள்ள அரசியல் கட்சிகளுக்கோ, இயக்கங்களுக்கோ இல்லை. 2023-ல் எடுக்கப்பட்ட குறிப்பின்படி, 90 ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவுச் சந்தை உலகம் முழுவதும் உள்ளது. இதைக் கைப்பற்றுவதற்குத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இறங்கி உள்ளன.
குறிப்பிட்ட சத்துள்ள உணவை மட்டும் எடுத்துக் கொண்டால் அது குறைபாடுள்ள உணவாகும். அரிசியை உணவாக உட்கொள்ளும் நிலை மாறிய போது உற்பத்தி முறையானது விவசாயிகளிடமிருந்து கம்பெனிகளுக்கு மாறியது. இது விதைகள், உரங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கைப்பற்றுவதன் மூலம் செல்கிறது. இதற்குப் பின்னால் ஒரு மருத்துவ மாஃபியா உள்ளது. இதற்கு தீர்வாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் பேசியபோது, ” ‘செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு தமிழர் கிராமங்கள் அழிப்பு’ என்ற புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும். இது மிகவும் அடிப்படையான உணவுப் பிரச்னை ஆகும். இது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு மனு கொடுத்தபோது இதையெல்லாம் பரிசீலித்து தகவல் கொடுக்கும் பொறுப்பை மாநில அரசுக்கு கொடுத்தது. 2021-ல் சுதந்திர தினவிழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சத்துக் குறைபாட்டை நீக்க அரிசியில் உணவுப் பொருள் கொடுக்கப்படும் என்று அவர் கூறிய பின் வல்லுநர்கள் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார்களே தவிர, முழு ஆய்விற்குப் பின் இதை நடைமுறைப்படுத்தவில்லை. மேலும், இதை பற்றி போதிய சிந்தனையில்லாமல், எல்லோருக்கும் பொதுவாக மாற்றுவது என்பது அவரசரப்பட்டு செய்வது. இதைப் பற்றி முழுமையாக அறிந்த பின்பு செயல்படுத்தலாம் என்று இந்திய நிதி ஆயோக் கூறியது. தவிர்க்க முடியாத சூழலில் வேறு அரிசியை வாங்க வேண்டுமென்று சட்டபடியாகச் சொன்னாலும், மனித உரிமையில் உணவுத் தேர்வு உரிமை மிகவும் அடிப்படையானது. நமது உரிமையை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும். எனவே, செறிவூட்டப்பட்ட அரிசியை எதிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்” என்று பேசினார்.