டெல்லியில் அதிகரித்த காற்று மாசு; அதிகளவில் குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்…

இந்தியாவில், டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் காற்று அதிக அளவு மாசுபட்டுள்ளது. டெல்லி மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக இருமல், சளி, சுவாசக் கோளாறு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. காற்று மாசு மக்கள் உடல்நலத்தை பாதித்து, இருமல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், நுரையீரல் கோளாறு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. காற்று மாசுபாட்டால் நுரையீரல், மார்பகம், கல்லீரல் புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்போது, டெல்லியில் மோசமான காற்று மாசு காரணமாக வரும் 10-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு பாதிப்பு

இந்தச் சூழலில், நேஷனல் கேன்சர் ரெஜிஸ்ட்ரி புரொகிராம் (National Cancer Registry Programme) அமைப்பு வெளியிட்டிருக்கும் தரவு, புற்றுநோய் பாதிப்பில் இந்திய நகரங்களில் ஒப்பீட்டளவில் டெல்லியில் உள்ள குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

2012-16ம் ஆண்டு வரை டெல்லியில் 14 வயது வரையிலான குழந்தைகள் எத்தனை பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3.7% பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் புற்று நோய் வர காற்று மாசுபட்டதுதான் காரணமா என்று தெரியவில்லை. அதிக அளவு காற்று மாசுபடுவதால் வயதானவர்களுக்கு புற்றுநோய் வருகிறது என்பதற்கு அதிக ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. காற்று மாசு காரணமாக குழந்தைகளுக்கு புற்றுநோய் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் பெரியவர்களை விட அதிக வேகமாக சுவாசிப்பார்கள். எனவே காற்று மாசுபடுவதன் மூலம் குழந்தைகளுக்கு புற்று நோய் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் காற்று மாசுபடுவதால் அதில் இருக்கக்கூடிய நச்சுகள் குழந்தைகளுக்கு புற்றுநோய் வர காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

நுரையீரல்

இந்தியாவில் மற்ற நகரங்களைவிட டெல்லியில்தான் குழந்தைகள் அதிக அளவு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அருணாச்சல பிரதேசத்தில் 10 லட்சம் ஆண் குழந்தைகளில் 12.2 ஆண் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் டெல்லியில் இது 203.1 ஆக இருக்கிறது. ஆசியாவில் சீனாவிற்கு அடுத்தபடியாக டெல்லியைச் சேர்ந்த ஆண் குழந்தைகளுக்கு புற்றுநோய் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலக அளவில் ஆண் குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதில், டெல்லி நகரம் ஆறாவது இடத்தில் இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படுவதில் 10-வது இடத்தில் இருக்கிறது.

ஆரம்பக்கட்ட ஆய்வில், போக்குவரத்து நெருக்கடியால் ஏற்படும் காற்று மாசுபடுவதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.