ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் இன்று இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதற்குக் காரணம் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த போதுமான நிதியைத் திரட்ட முடியவில்லை என்று அதன் நிறுவனர் கைவிரித்துவிட்டதுதான். ஆனால், சமீப காலங்களாக ஜெட் ஏர்வேஸ் குறித்து வரும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்காக வங்கிகள் வாங்கியக் கடன் பணத்தை கையாடல் செய்ததாக நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் நரேஷ் கோயலை கைது செய்து, ரூ.538 கோடி மதிப்பிலான அவருடைய குடும்பச் சொத்துகளையும் முடக்கியுள்ளது. நரேஷ் கோயல் என்ற தனிநபர் செய்த தில்லாலங்கடி வேலைகளையும் அம்பலப்படுத்தி இருக்கிறது அமலாக்கத்துறை. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

சிறப்பாக செயல்பட்டு வந்த ஜெட் ஏர்வேஸ் 2017 முதல் நஷ்டத்தைச் சந்திக்க ஆரம்பித்தது. சில வருடங்களிலேயே முழுவதுமாக நிதி நெருக்கடிக்குள்ளாகி தொடர்ந்து நடத்த முடியாமல் 2020-ல் அனைத்து சேவைகளையும் நிறுத்திவிட்டு திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டு வேறு நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இந்நிலையில்தான் ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
ரூ.6,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன்களை வாங்கியிருக்கும் நரேஷ் கோயல் அவற்றில் பெரும்பகுதி நிதியைப் பல்வேறு முறைகேடான நடவடிக்கைகள் மூலமாக கையாடல் செய்து பல்வேறு நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனை செய்திருக்கிறார் என அமலாக்கத்துறையின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை குறித்து அமலாக்கத்துறை நரேஷ் கோயல், அவரது நிறுவனம் மற்றும் மனைவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளது.
அதில் அமலாக்கத்துறை கூறியிருப்பதாவது, “ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வாங்கிய கடனில் ரூ.4,057 கோடிக்கும் மேலான தொகையை ஜெட் லைட் லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றி கையாடல் செய்துள்ளார். இந்தத் தொகையின் பெரும்பகுதி டிக்கெட் விற்பனை மூலமாக சரிசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு வல்லுநர்கள், ஆலோசகர்களுக்கும் கணிசமான தொகை பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் சேவை வழங்கியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. மேலும் 2016 முதல் 2018 வரை அவ்வப்போது ஜிஎஸ்டி ஆலோசனைக் கட்டணம் செலுத்தி வந்ததாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் 2017 ஜூலை 1 முதல்தான் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தது. அதுமட்டுமல்லாமல் கொசுவத்தி சுருள் உற்பத்தி நிறுவனம், விமான உதிரி பாகங்கள் குறித்து ஆலோசனை வழங்க ரயில்வே இன்ஃப்ரா நிறுவனம், நிதி ஆலோசனைக்காக வைர ஏற்றுமதியாளர் நியமனம் போன்ற பல வழிகளில் பலருக்குப் பணத்தை பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆயிரம் கோடிகள் வங்கிக் கடனை வாங்கி அதை முறைகேடாகப் பயன்படுத்தியதால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு விமான சேவை நிறுவனத்தையே ஒன்றுமில்லாமல் ஆக்கியிருக்கிறார் நரேஷ் கோயல் என்று அவர் மீது விமர்சனங்களும் புகார்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த கட்ட விசாரணைகளில் முழுத் தகவல்களும் தெரியவரும் எனக் கூறப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.