விருதுநகர்: கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்துவரும் மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. குல்லூர்சந்தை அணை நிரம்பி வழிவதால் தரைப்பாலம் மூழ்கியது.
சுட்டெறிக்கும் வெயிலுக்கு இடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனால், வேளாண் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. தொடர் மழைப்பொழிவு காரணமாக வேளாண் பணிகளுக்கு போதிய அளவு குளங்களிலும் கண்மாய்களிலும் நீர் நிறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சிமலை பகுதியில் தொடர் மழைப்பொழிவு காரணமாக காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் அதிக நீர்வரத்து காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் குளங்கள், கண்மாய்கள் மற்றும் நீர்த்தேக்க பகுதிகளிலும் நீரின் அளவு வேகமாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி 14.5 மீட்டர் உயரம் உள்ள பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 11.48 மீட்டராக உயர்ந்தது. 13 மீட்டர் உயரம் உள்ள கோவிலாறு அணையின் நீர்மட்டம் 3.75 மீட்டராகவும், 7.50 மீட்டர் உயரம் உள்ள ஆனைக்குட்டம் நீர்த்தேக்க அணையில் 3.1 மீட்டர் என்ற அளவிலும் நீர்மட்டம் உள்ளது. மேலும், 10 மீட்டர் உயரம் கொண்ட சாஸ்தா கோயில் அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தொடர் மழையால் 7 மீட்டர் உயரம் உள்ள வெம்பக்கோட்டை அணையில் தற்போது 4.07 மீ தண்ணீர் உள்ளது. 5.50 மீட்டர் உயரம் உள்ள கோல்வார்பட்டி அணையில் 4 மீட்டர் தண்ணீர் தேங்கியுள்ளது. 6.85 மீட்டர் உயரம் உள்ள இருக்கன்குடி வைப்பாறு அணையில் 1.9 மீட்டர் தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாததாலும், அணையில் உள்ள மண் திட்டுக்கள், கருவேல மரங்கள் அகற்றப்படாததாலும் தொடர் மழை பெய்தும் நீர் வரத்து குறைந்தே காணப்படுகிறது.
ஆனால், 2.45 மீட்டர் உயரம் உள்ள குல்லூர்சந்தை அணையும் முழு கொள்ளளவை கடந்து நிரம்பி வழிகிறது. இந்த அணை மூலம் குல்லூர்சந்தை, சூலக்கரை, மெட்டுக்குண்டு, சென்நெல்குடி, செட்டிபட்டி, மருளூத்து, கல்லுமார்பட்டி கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது இந்த அணை முழு கொள்ளவை எட்டி நீர் நிறைந்து வழிகிறது. இதனால், அணையிலிருந்து செல்லும் வாய்க்காலிலும் நீர் நிறைந்து ஓடுகிறது. இதனால், இன்று அதிகாலை முதல் குல்லூர்சந்தை- மாத்தநாயக்கன்பட்டி சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து பாலத்தின் மேல் சுமார் 2 அடி அளவுக்கு தண்ணர் செல்கிறது.
தரைப்பாலம் மூழ்கியுள்ளதால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துடன் பாலத்தை கடந்து செல்கின்றனர். அதோடு, குல்லூர்சந்தை கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஆற்றில் மீன்பிடித்தும், சிறுவர்கள் குளித்தும் மகிழ்ந்தனர்.