பெங்களூரு, : பெங்களூரில் வனத்துறையினர் துப்பாக்கி குண்டுக்கு, சிறுத்தை பலியான பின், மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் தற்போது இரண்டு இடங்களில், சிறுத்தை நடமாடுவது, மக்கள் மற்றும் போலீஸ் துறையின் துாக்கத்தை கெடுத்துள்ளது.
பெங்களூரு, பொம்மனஹள்ளியின், கூட்லுகேட் அருகில் சமீபத்தில் சிறுத்தை நடமாடியது. மக்களை அச்சுறுத்தியது. இதை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, சிறுத்தையை தேடி அலைந்தனர். கூட்லுகேட்டின், கிருஷ்ண ரெட்டி லே அவுட்டில் பாழடைந்த இடத்தில், சிறுத்தை பதுங்கியிருந்ததை கண்டுபிடித்தனர். அதை பிடிக்க முயற்சித்தனர்.
ஆனால், வனத்துறையினரின் துப்பாக்கி குண்டுக்கு சிறுத்தை பலியானது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்நிலையில் பெங்களூரின் இரண்டு இடங்களில், சிறுத்தை தென்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சிட்டியின், சிக்கதோகூருவில் சிறுத்தை நடமாடியது. அதன் கால் தடங்களும் பதிவாகியுள்ளன.
அதே போன்று ஆனேக்கல்லின், கூட்லு அருகில், ஏ.இ.சி.எஸ்., லே அவுட்டின், எம்.எஸ்.தோனி பள்ளி அருகில், நேற்று முன் தினம் இரவு, 10:30 மணியளவில், சிறுத்தை தென்பட்டது. இரு சக்கர வாகனத்தில் சென்ற தப்ரேஜ் என்பவர், சிறுத்தையை கவனித்தார். உடனடியாக வனத்துறையினருக்கு, தகவல் தெரிவித்தார்.
வனத்துறையினரும் நேற்று காலை, அங்கு வந்து சோதனையிட்டனர். சிறுத்தையை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரண்டு இடங்களில் சிறுத்தை நடமாடுவதால், மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அஞ்சுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement