Bodies Review: வெவ்வேறு ஆண்டுகள் – நான்கு முறை கொல்லப்படும் ஒரே நபர்! ஈர்க்கிறதா இந்த மர்மத் தொடர்?

லண்டனில் 1890, 1941, 2023 மற்றும் 2053 ஆகிய நான்கு வெவ்வேறு காலகட்டங்களில், ஒரே வீதியில், ஒரே மாதிரியான துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன், ஒரே நபர் நிர்வாணமாக இறந்து கிடக்க அதனை அந்தந்த காலத்திலிருக்கும் நான்கு துப்பறிவாளர்கள் விசாரணை செய்வதே `பாடீஸ்’ வெப் தொடரின் சுவாரசியமான ஒன்லைன்.

Bodies Review

முதலில் நிகழ்காலத்தில் (2023 ஆண்டு) ஷஹாரா ஹசன் (அமகா ஒகாஃபோர்) என்ற இஸ்லாமியக் காவல்துறை அதிகாரி தனது தந்தை மற்றும் மகளுடன் சிங்கிள் மதராக லண்டனில் வாழ்ந்து வருகிறார். போலீஸ் வேலை, குடும்பத்துக்காக அவர் செலவிடும் நேரத்தை ரொம்பவே பாதிக்கிறது. சம்பவம் நடக்கும் நாளன்று ஒரு தீவிர வலதுசாரி பேரணியில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்க ஹசன் அழைக்கப்படுகிறார். அங்கே சந்தேகத்துக்கு இடமாகத் தெரியும் ஒரு சிறுவனை அவர் பின்தொடர, மணிக்கட்டில் குறியீடு கொண்ட அந்த இறந்த நிர்வாண உடலைக் கண்டெடுக்கிறார். மேலும் இவரது விசாரணையின் கிளைக்கதையாகப் பிரிட்டிஷ் சமூகம் இன்றும் இனநிறவெறியுடனும், இஸ்லாத்திற்கு எதிராக இருப்பதையும் காட்சிப்படுத்துகிறார்கள்.

அடுத்தாக இரண்டாம் உலகப் போரின் வான்வழித் தாக்குதல் சைரன் சத்தங்களுக்கு மத்தியில் 1941-ம் ஆண்டுக்குப் பின்னோக்கி செல்கிறோம். அங்கே டிடெக்டிவ் கார்ல் வைட்மேன் (ஜேக்கப் பார்ச்சூன்-லாயிட்) ஒரு மர்மமான தொலைபேசி அழைப்பைப் பெறுகிறார். அவர்கள் ஜெர்மன் ராணுவத்தின் குண்டுவெடிப்புத் தாக்குதலின் நடுவில் ஓர் இறந்த உடலை அப்புறப்படுத்துமாறு கட்டளையிடுகிறார்கள். அந்த மர்மமான அமைப்பின் மூலம் கையாளப்படும் அவர் கண்டெடுக்கும் இறந்த உடல், அச்சு அசல் 2023-ம் ஆண்டு ஹசன் கண்ட அதே உடல். மேலும் இதன் கிளைக்கதையாக அக்காலத்தில் இங்கிலாந்தில் பரவியிருந்த யூத மதவெறியைக் காட்டுகிறார்கள்.

Bodies Review

அடுத்ததாகக் கதை நியோ-நோயர் பாணியில் 1890 ஆண்டுக்குச் செல்கிறது. அங்கே விக்டோரியன் லண்டனில் டிடெக்டிவ் ஆல்ஃபிரட் ஹில்லிங்ஹெட் (கைல் சோலர்) தனது மனைவி மற்றும் பியானோ கலைஞரான மகளோடு வாழ்ந்து வருகிறார். அங்கே மேற்கண்ட இருவரும் சந்தித்த அதே இறந்த நிர்வாண உடலை இவரும் சந்திக்க நேர்கிறது. இதில் ஒரு சிறு தடயமாக ஒரு பத்திரிகையாளர் எடுத்த புகைப்படம் கிடைக்கிறது. ஆனால் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபரின் அரசியல் பலத்தினால் இந்தக் கொலையை மறைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார் ஹில்லிங்ஹெட். ஆனாலும் சில குறியீடுகளை விட்டுச் செல்கிறார். இக்கதையிலும் கிளைக்கதையாக அந்நாள்களில் இங்கிலாந்தில் நிலவிய தன்பாலின ஈர்ப்புக்கு எதிரான சூழல்கள் காட்டப்படுகின்றன.

இறுதியாக டிஜிட்டல் சுவர்கள் சூழ்ந்த நவீன யுகமான 2053-க்கு கதை நகர்கிறது. அங்கே ஐரிஸ் மேப்பிள்வுட் (ஷிரா ஹாஸ்) ஒரு ரகசிய அமைப்பின் கீழ் துப்பறிவாளராக கற்பனாவாதத்தில் தனிமையான வாழ்க்கையை வாழ்கிறார். அவரது உடல் ரீதியான பிரச்னையைத் தவிர்க்க முதுகெலும்பில் பொருத்தக்கூடிய எலக்ட்ரானிக் கேட்ஜெட் ஒன்று உதவுகிறது. இந்நிலையில் மற்ற மூன்று துப்பறிவாளர்கள் சந்தித்த நிர்வாண உடலை இவரும் சந்திக்கிறார். ஆனால் அதில் திடுக்கிடும் திருப்பம் என்னவென்றால் அந்த உடல் உயிரோடு இருக்கிறது. கொலை செய்யப்பட்ட நபர் யார், எப்படி நான்கு காலகட்டங்களிலும் ஒருவரே இருக்கிறார், இறந்து போகிறார், நான்கு துப்பறிவாளர்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கு விடை காண்பதே இந்த வெப் சீரிஸ்.

Bodies graphic novel

இந்தத் தொடர் 2015-ம் ஆண்டு வெளிவந்த DC நிறுவனத்தின் ஒரு கிராபிக் நாவலின் தழுவலாகும். 8 எபிசோடுகள் அடங்கிய இந்தத் தொடரில் ஒவ்வொரு எபிசோடுகளின் முடிவும், அடுத்து என்ன, அடுத்து என்ன என்கிற சுவாரஸ்யப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது. முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் தங்களின் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். நான்கு துப்பறியும் கதாபாத்திரங்களைத் தாண்டி இலியாஸ் மனிக்ஸ் (ஸ்டீபன் கிரகாம்) கதாபாத்திர வடிவமைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இந்தத் தனிக்கதைகளை எல்லாம் ஒரே புள்ளியில் இணைத்த விதமும் கண்களை விரிய வைக்கிறது.

அதே போல எடிட்டிங்கில் ஒவ்வொரு உச்சபட்ச காட்சிகளிலும் காமிக்ஸ் புத்தகத்தின் பேனல்களைப் பிரிக்கும் பிளவுகளைப் போலக் காலங்களைப் பிரித்துக் காட்சிப்படுத்தியது பரபரப்பைக் கூட்டியுள்ளது. எது எந்தக் காலம் என்பது குறித்த குழப்பங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு காலகட்டங்களுக்கும் வெவ்வேறு ஒளியுணர்வைக் கொடுத்துச் சிறப்பாக வடிவமைத்துள்ளனர். நான்கு துப்பறியும் கதாபாத்திரங்களையும் அதிகம் கவனிக்கப்படாத சிறுபான்மை மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. இதில் லண்டன் மாநகரத்தின் விதிகள் வெவ்வேறு காலத்துக்கு ஏற்றவாறு மாறியிருப்பதை நகரத்தின் வரலாற்றோடு ஒருங்கிணைத்து அட்டகாசமாக எழுதியிருக்கிறார் கதையாசிரியர் பால் டோமலின்.

Bodies

ஆச்சர்யத்தோடு ஆரம்பிக்கும் திரைக்கதை, ஒரு கட்டத்தில் போக போக சஸ்பேன்ஸ் முடிச்சுகளால் மூளைக்குப் பயங்கர வேலை தர ஆரம்பிக்கிறது. அங்கே தொடங்கிய ஆர்வம் ரகசிய அமானுஷ்யக் குழு, துப்பாக்கிச் சூடு, பாம் பிளாஸ்ட், கார் சேஸிங், பிளாக்மெயில் சதிகள், டைம் மெஷின் எனப் புது புது திருப்பங்கள் கொடுத்து 8 எபிசோடுகளையும் ஒரே சிட்டிங்கில் பார்க்க வைக்கிறது. 

Bodies Review

“Know you are Loved” என்று அன்புக்காக எங்கும் ஒற்றை வாக்கியத்தின் பின்னணியில், Sci-Fi, இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர், பேன்டஸி, டைம் லூப் என எக்கச்சக்க காம்போக்களை அடக்கிய பேக்கேஜாக அளித்திருப்பதாலே இந்த `பாடிஸ்’ தொடரினை வீக் எண்டு பிஞ்ச் வாட்ச் லிஸ்ட்டில் நிச்சயமாகச் சேர்க்கலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.