பெங்களூரு : பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு முழுதும் இடியுடன் பெய்த கன மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், விடிய விடிய மழையிலும், குளிரிலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. விடிட, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி, வாகன ஓட்டிகள் திணறினர். தண்ணீர் வடிய, பாதாள சாக்கடைகளை திறந்து வைத்து, தடுப்புகளை போலீசார் அமைத்தனர்.
ஸ்ரீராமபுராவில் சுரங்கப்பாதை முற்றிலும் நீரில் மூழ்கியது. கன்டோன்மென்ட், வசந்த் நகர், ஜே.சி., நகரின் தொலைக்காட்சி துார்தர்ஷன் மையம் சுற்றிலும் தண்ணீர் தேங்கியது.
மத்திகெரே, யஷ்வந்த்பூர், தாசரஹள்ளி, எலஹங்கா, பேகூர், கோரமங்களா, சந்திரா லே – அவுட், நாயண்டஹள்ளி, ஜெயநகர், சுங்கதகட்டே ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் ஓடை போன்று தண்ணீர் ஓடியது. மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சில பகுதிகளின் மின் தடை ஏற்பட்டது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துணை முதல்வர் ஆய்வு
கன மழை பெய்ததை தொடர்ந்து, பெங்களூரு நகர வளர்ச்சி துறை பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் சிவகுமார், உடனடியாக பெங்களூரு மாநகராட்சியின் கண்காணிப்பு அறைக்கு வந்தார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம், அசம்பாவிதம் சம்பவங்கள் ஏதாவது நடந்ததா என கேட்டறிந்தார். காந்தி நகர், சஞ்சய் நகர், காடி ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிகாரிகள் குழுவை அனுப்ப அறிவுறுத்தினார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ”முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சியின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். பல புகார்கள் வந்துள்ளன. உடனடியாக அந்த இடங்களுக்கு செல்லுமாறு பரிந்துரைத்துளளேன்,” என்றார்.
குருபரஹள்ளியில் பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த மளிகை பொருட்கள், படுக்கை, துணிகள், மழைநீரில் நனைந்தன. இரவு முழுதும் மக்கள் குளிரில் நடுங்கியபடி விழித்திருந்தனர்.
கோரகுண்டேபாளையாவில் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதுபோன்று நகரின் பல இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்