திரைப்பட ஆளுமை கமல்ஹாசனுக்கு இன்று 69 வது பிறந்தநாள். அதனை முன்னிட்டு பலதரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு தளத்திலும் திறம்பட சாதனைகள் புரிந்த, கொண்டாடப்படவேண்டிய மனிதர்கள் ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு விகடன் வாசகர்களின் கேள்விகளோடு மேடையேற்றிய பகுதிதான் ஆனந்த விகடனில் வெளிவந்த ‘விகடன் மேடை’. வாசகர்களின் ‘நச்’ கேள்விகளுக்கு, பிரபலங்களின் ‘பளிச்’ பதில்கள் அதில் இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் கமலின் பிறந்தநாளான இன்று 2014 -ம் ஆண்டு ‘விகடன் மேடை’யில் வாசகர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பளிச் பதில்களைப் பார்ப்போம்.

”உங்கள் ரசிகர்கள் உங்கள் தனிப் பட்ட வாழ்க்கையைப் பார்த்து, அவர்களும் பின்பற்ற மாட்டார்களா?”
”காந்தி, கோட்ஸே, ஹிட்லர், புத்தர், இயேசு போன்றோரைப் பார்த்துக் கற்காத அவர்களின் ரசிகர்கள் போல்தான் என் ரசிகர்களும். நல்லது கெட்டது தெரிந்தவர்கள்!”

”உங்களின் பேச்சு, கவிதை, திறமையை வெளிப்படுத்தும் விதம், எல்லாமே ஒரு முறைக்குப் பல முறை உன்னிப்பாகக் கவனித்தால்தான் புரிகிறது. இது உங்களுக்குத் தெரியுமா? ஏன், எதையுமே ‘சட்’டென்று மற்றவர்கள் புரியும்படி செய்யக் கூடாதா சார்?”
”பல முறை கவனிக்கப்படுவதே வெற்றி தானே. உங்களுக்குப் புரியாமல் போனதற்கு வருந்துகிறேன். நன்றி, மீண்டு வருக!”
”உங்களைக் கவர்ந்த பெண் யார்?”
”என் தாயில் துவங்கிப் பலர்!”

”கட்டிப்பிடி வைத்தியத்தில் தங்களுக்கு உண்மையிலேயே நம்பிக்கை உண்டா? அது ரீலா… ரியலா?”
”ரீலைப் பொறுத்தவரை ரியல். பொது இடங்களில் ட்ரை பண்ணால்… வேலைக்கு ஆவாது!”

” ‘லேட்-சைல்டு’ என்கிற வருத்தம் இப்பவும் தங்களிடம் இருக்கிறதா?”
” ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கறதுனால… இல்ல!’ பஞ்ச் வசன உபயம்: நண்பர் ரஜினி!”

” ‘சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?’
”ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!”
”ஸ்டாண்ட் அப் காமெடி ஷோக்களில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகள் உங்களை இமிடேட் செய்வதை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?”
”நானே ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுதானே. ஒரு கதை நினைவு வருகிறது. ஆர்வத்துடன் திரு.ராஜாஜியைப் படம் வரைந்த ஒரு சிறுவன், தான் அவரைத் தத்ரூபமாக வரைந்ததாய் நினைத்துக்கொண்டு, அதில் அவர் கையெழுத்து வாங்க முண்டியடித்து அவரிடம் நீட்ட. அதில் ராதாகிருஷ்ணன் என்று கையெழுத்திட்டாராம் ராஜாஜி. ‘இது உங்க கையெழுத்து இல்லையே’ என்ற சிறுவனிடம், ‘படமும் என்னுதில்லயே’ என்றாராம் ராஜாஜி. சில சமயம் மிமிக்ரிக்களும் அப்படி ஆவது உண்டு.”

‘ஓட்டு போட விருப்பமா… வாங்க விருப்பமா?’
”எதுவுமே வாங்காமல் ஓட்டுப் போடவே எப்போதும் விருப்பம்!”

”நீங்கள் கண்ட கனவு நிஜமானது உண்டா… அந்தக் கனவு என்ன?”
”நான் நடிகனானது, இயக்குநரானது, சினிமாவுக்குப் பாட்டு எழுதியது, திரைக்கதை எழுதியது, உங்கள் பாராட்டுக்கள் கிடைத்தது எல்லாமே நான் கண்ட கனவுகளே!”
‘நீங்கள் நடிக்காத படங்களில் பிடித்த படம்… சந்திக்காத நபர்களில் பிடித்த நபர்… உங்களை இயக்காத இயக்குநர்களில் பிடிக்காதவர்..?”
”நான் நடிக்க வாய்ப்பு இல்லாமல் போன பல நூறு படங்களின் பட்டியல் கைவசம். சந்திக்காத நபர்களில் காந்தி, பாரதியார் உள்ளிட்ட பெரிய பட்டியலில் நடிகர் திரு ரங்கா ராவும் அடக்கம். என்னை இயக்க மறந்த பல நல்ல இயக்குநர்கள் உள்ளனர். அந்தக் காரணத்துக்காகவே அவர்கள் அனைவரையும் பிடிக்காது!”

”பெரியார், காந்தி… உங்களுக்கு நெருக்கமானவர் யார்?”
”குஜராத்… கொஞ்சம் தூரம். ஈரோடு… பக்கம். தவிர, என் மொழியில் பேசுபவர் பெரியார். நான் பெரியாருடன் காந்திக்கு மிக நெருங்கியவன்!”