புதுடில்லி,:’பேரியம்’ கலந்த பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு புதுடில்லி மட்டுமின்றி நாடு முழுதுக்கும் பொருந்தும் என, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
புதுடில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுவை கட்டுப்படுத்தவும், தீபாவளி மற்றும் திருமணங்களின் போது பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை 2018ல் விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரியம் நைட்ரேட் மற்றும் தடை செய்யப்பட்ட மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடிக்க தடை விதித்தது.
மேலும் பசுமை பட்டாசுகளை வெடிக்கவும் அறிவுறுத்தியது.
மேலும், பட்டாசுகள் வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூரில் தீபாவளி மற்றும் திருமணங்களின் போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவுகள், புதுடில்லிக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்’ என, உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement