ஜோஹன்னஸ்பர்க்:காசாவில் இனப் படுகொலை நடப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள தென்னாப்ரிக்கா, இஸ்ரேலுக்கான தன் நாட்டு உயர்மட்ட துாதரை திரும்பப் பெற்றது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான போர், ஒரு மாதமாக நடந்து வருகிறது.
இரு தரப்பிலும் கடுமையாக நடத்தப்படும் தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். காசா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை பாலஸ்தீனத்தை சேர்ந்த 9,400 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தான் அதிகம் இறந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட தென்னாப்ரிக்க அரசு, காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்துக்கு சமீபத்தில் அழைப்பு விடுத்தது.
அதேசமயம், குண்டுவீச்சுக்குள்ளான பகுதிக்குள் உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதன் அடுத்தகட்டமாக, இஸ்ரேலில் உள்ள உயர்மட்ட துாதர் உட்பட அனைத்து அலுவலர்களையும் அந்நாடு திரும்பப் பெற்றுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு பொறுப்பு அமைச்சர் கும்புட்சோ ஷவ்ஹேனி கூறியதாவது:
தென்னாப்ரிக்கா அரசு டெல் அவிவ் நகரில் உள்ள அனைத்து துாதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
பாலஸ்தீனத்தில் குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீது நாங்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்.
எங்கள் அதிகாரிகளுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. எனவே, உயர்மட்ட துாதர் உட்பட அனைத்து அலுவலர்களும் திரும்பப் பெறப்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement