மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக கட்சி பெயர், கொடி, லெட்டர் பேடுகளை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை கொண்டாடும் வகையில் கட்சியினருக்கு இனிப்பு வழங்கிய ஆர்.பி.உதயகுமார், பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, “சாமானியர்களின் இயக்கமாக அரை நூற்றாண்டுகளை கடந்து 31 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் அதிமுக இருந்தது.
ஒன்றரைக் கோடி தொண்டர்களின் ஆதரவை பெற்று கழகத்தின் பொதுச் செயலாளராக எடப்பாடியார் தேர்வு செய்தது செல்லும் என உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கினார்கள்.

மக்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கழகத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்தி வருவது குறித்து எங்களால் தொடரப்பட்ட வழக்கில் மக்களின் குழப்பத்தை தீர்க்கும் வகையிலும், ஊடகங்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் வரலாற்று தீர்ப்பு கிடைத்துள்ளது.
நாளையே தேர்தல் வந்தாலும் மீண்டும் முதல்வராக வரக்கூடிய மக்கள் செல்வாக்கு பெற்றுள்ள எடப்பாடியார் தலைமைக்குத்தான். இனி கட்சி, அண்ணா உருவம் பொறித்த கொடி, கட்சி அலுவலகம், லெட்டர்பேடு என அனைத்தும் எடப்பாடியாருக்கே சொந்தம். இதை இனி துரோகிகளோ எதிரிகளோ பயன்படுத்த முடியாது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது.

இது நமக்கு புதிய நம்பிக்கையை தரக்கூடிய செய்தி, மீண்டும் எடப்பாடியார் முதல்வராக வர வலிமை சேர்க்கும் வகையில் நம்பிக்கை பிறந்துள்ளது. இனி துரோகிகளுக்கு இந்த இயக்கத்தில் இடமில்லை, அவர்களுக்கு எதுவும் சொந்தமில்லை என்ற தீர்ப்பு வரவேற்க தக்கது, நீதியரசர்கள் நியாத்தின் பக்கம் சத்தியத்தின் பக்கம் தீர்ப்பு வழங்கியுள்ளனர் அவர்களுக்கு நன்றியை மக்களின் சார்பில், தொண்டர்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.