கிருஷ்ணகிரியில் தொடர் மழை – வேப்பனப்பள்ளி அருகே மின்னல் தாக்கி 8 ஆடுகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையின் போது, வேப்பனப்பள்ளி அருகே மின்னல் தாக்கியதில், 8 ஆடுகள் உயிரிழந்தன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பகலில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்த போதும், மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு மிதமானது முதல் கனமழை பெய்தது.

இதனால், போச்சம்பள்ளி, சூளகிரி உள்ளிட்ட பகுதியில் வயல்களில் மழை நீர் தேங்கி அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்தன. வேப்பனப்பள்ளி அருகே திம்மசந்திரத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் ஆடுகள் வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர்

தனக்குச் சொந்தமான 50 ஆடுகளை: அருகில் உள்ள நிலத்தில் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலையில் அப்பகுதியில் பெய்த கனமழையின்போது, மின்னல் தாக்கியதில், 8 ஆடுகள் உயிரிழந்தன. இது தொடர்பாக வருவாய்த் துறை மற்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழையளவு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: சூளகிரி 36, சின்னாறு அணை 30, நெடுங்கல் 25.5, கிருஷ்ணகிரி அணை 25, கிருஷ்ணகிரி 23, தேன்கனிக்கோட்டை 21, ராயக்கோட்டை 17, கெலவரப்பள்ளி அணை, அஞ்செட்டியில் தலா 8, ஓசூர், போச்சம்பள்ளியில் தலா 1 மிமீ மழை பதிவானது.

இதனிடையே, கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 669 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 608 கனஅடியாக சரிந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 732 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.35 அடியாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.