உணவகங்களின் தரமான உணவும், அதன் கிரியேட்டிவிட்டியும் மக்களை அதிகளவில் ஈர்ப்பதுண்டு. மக்களுக்குப் பிடிக்க வேண்டும், வித்தியாசமான அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக உணவகங்களும் சில முயற்சிகளை மேற்கொள்வதுண்டு.
இப்படி தாய்லாந்தின் ஸ்வீட் ஃபிஷஸ் கஃபேயில் கணுக்கால் அளவு தண்ணீரில் மீன்கள் விடப்பட்டு, கஸ்டமர்கள் அந்தத் தண்ணீரில் நடந்து சென்று இருக்கையில் அமர்ந்து சாப்பிடும் வீடியோ காட்சிகள் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட நிலையில் வைரலாகி வருகின்றன.
ரெட்டிட் தளத்திலும் ஒரு பயனர் சில ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து பகிர்ந்திருந்தார். விலங்கு நல ஆர்வலர்கள் கஃபேயின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தையடுத்து கஃபே தொடங்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே மூடப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் இந்த கஃபே தொடங்கப்பட்ட போது அதன் உரிமையாளர் யோசபோல் ஜிட்மங், “வியட்நாமில் உள்ள `Amix cafe’ மூலம் ஈர்க்கப்பட்டு இந்தக் கடையை வடிவமைத்தேன். இங்கு வரும் கஸ்டமர்கள் நீந்திக் கொண்டிருக்கும் மீன்களோடு தொடர்பு கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த கஃபே உருவாக்கப்பட்டது.
தாய்லாந்தில் இந்த டிசைன் போல யாரும் வைத்திருக்கவில்லை என்பதை அறிந்தேன். அதனால் இது போன்ற கஃபே தொடங்க வேண்டும் என்று தோன்றியது.
ஃபில்ட்ரேஷன் சிஸ்டத்தை (Filtration system) உருவாக்குவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. 24 மணி நேரமும் வேலை செய்யும் நான்கு பெரிய வடிகட்டும் அமைப்புகளைத் தொழிலாளர்கள் வடிமைத்தனர். ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரையும் மாற்றினார்கள்.
ஒவ்வொரு வாடிக்கையாளரையும் ஓட்டலுக்குள் அனுமதிப்பதற்கு முன், ஊழியர்கள் வாடிக்கையாளர்களைக் கிருமி நீக்கம் செய்யும் பகுதி வழியாக வரச்சொல்லி அவர்களின் கால்களைச் சுத்தம் செய்து அழைத்துச் சென்றனர்.

வாடிக்கையாளர்கள் மீன்களைத் தொடவோ, தொந்தரவு செய்யவோ கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்பட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.
இங்கு `Koi’ என்று அழைக்கப்படும் வெளிப்புற குளங்கள் அல்லது நீர்த் தோட்டங்களில் அலங்கார நோக்கங்களுக்காக வைக்கப்படும் வண்ண மீன்கள் விடப்படுகின்றன. இந்த மீன்கள் பொதுவாக மக்களைப் பார்த்து பயப்படுவதில்லை. மனிதர்களின் கால்களின் இறந்த சருமத்தையும் நீரில் உள்ள மற்ற உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.
இதுபோன்று நீங்கள் கண்ட வித்தியாசமான உணவகங்கள் உண்டா?! கமென்ட்டில் சொல்லுங்கள்!