குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 2, 2ஏ உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

இதுதொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டிஎன்பிஎஸ்சியால், குரூப் 2, 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய 2 தாள்களுக்குமான தேர்வு கடந்த பிப்.25-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர்.

இது மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வாணையம் நடத்தும்முதன்மை எழுத்துத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையைவிட மும்மடங்கு அதிகமாகும்.

இத்தேர்வு முடிவுகளை வெளியிட மத்திய அரசின் குடிமைப் பணிகள் தேர்வாணையம் எடுத்துக்கொள்ளும் காலஅளவு 5 மாதங்களாகும். எனவே மத்திய அரசின்தேர்வாணையத்தின் செயல்திறனுக்கு நமது மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல்திறன் எந்த வகையிலும் குறைவானது இல்லை.

கணினி மதிப்பீட்டு ஆய்வகம்: மேலும், இப்பணி தொடங்கப்பட்ட மார்ச் மாதத்தில் தேர்வாணையத்தில் ஒரு கணினி ஆய்வகம் மட்டுமே இருந்தது. வேறு சில தேர்வுகளின் எழுத்துத்தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலையில் இருந்ததால் இப்பணிகள் ஆரம்பிக்க சற்று தாமதமானது.

இதுபோன்ற தாமதத்தைத் தவிர்ப்பதற்காக, ரூ.1 கோடி மதிப்பில், 2 வது கணினி மதிப்பீட்டு ஆய்வகம் அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 2-வது ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதனால், தற்போது மதிப்பீட்டுப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. 80 சதவீதத்துக்கும் மேலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு 6 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி நியமன ஆணைகள் முதல்வரால் வழங்கப்படும்.

இந்த ஆண்டில் மட்டும் 13 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் குரூப்-4 பணியில் தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த ஆண்டில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.