புதுடெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு 21 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பி உள்ளது.
நேபாளத்தின் ஜாஜர்கோட் பகுதியில் கடந்த 3-ம் தேதி ஏற்பட்டநிலநடுக்கம் ரிக்டர் அலகில் 6.4 புள்ளிகள் ஆக பதிவானது. இதில் 157 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில், நேபாளத்துக்கு முதல் நாடாக இந்தியா நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படையின் சி-130ஜே ரக சரக்கு விமானத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள தார்பாலின் சீட்கள், போர்வைகள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், எளிதில் தூக்கிச் செல்லும் வென்டிலேட்டர்கள் என 11 டன்னுக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்கள் நேபாள்கஞ்ச் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், நேற்று முன்தினம் விமானப்படையின் மற்றொரு சி-130ஜே விமானத்தில் 9 டன்னுக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்கள் நோபாள்கஞ்ச் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை மொத் தம் 21 டன் நிவாரணப் பொருட்களை நேபாளத்துக்கு இந்தியா அனுப்பியுள்ளது. ‘ஆபரேஷன் மைத்ரி’ என்ற பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘அண்டை நாடுகளுக்கு முதலில் உதவ வேண்டும் என்ற கொள்கையை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். அதன்படி நெருக்கடி நேரத்தில், அண்டை நாடுகளுக்கு உதவுவதில் இந்தியா உறுதியுடன் உள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார்.