ராஷ்மிகா விவகாரம் எதிரொலி | போலி வீடியோக்களை பரப்பினால் 3 ஆண்டு சிறை: மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ வைரலான நிலையில், போலி வீடியோக்களை உருவாக்கி பரப்புபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராமல் ஜாரா படேல் மிகவும் பிரபலம். இங்கிலாந்துவாழ் இந்தியரான ஜாரா படேல், கடந்த மாதம் இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், சிலர் அந்த வீடியோவில், அவரது முகத்துக்குப் பதிலாக பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வைத்து போலி வீடியோவை உருவாக்கி பரப்பியுள்ளனர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பல்வேறு பிரபலங்கள், இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த, சமூக வலைதளங்களுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. போலி வீடியோக்கள், புகைப்படங்களை உருவாக்கி வெளியிடுபவர்களுக்கு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66டி-யின்படி 3 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் வீடியோவை நீக்க வேண்டும் என்று சமூக வலைதள நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ச்சிஅடைந்து வரும் நிலையில்,அவற்றைப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போலி புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய போலி உருவாக்கங்கள் ‘டீப் ஃபேக்’ என்று அழைக்கப்படுகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.