புஜ், ”இந்தியாவில் இருந்து தென் மாநிலங்களை பிரிக்க, தங்களை திராவிடர்கள் என்றும், வேறு மொழி பேசுபவர்கள் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியா எப்போதும் ஹிந்து தேசமாக இருக்கும்,” என, ஆர்.எஸ்.எஸ்., பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலெ தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் நடந்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய செயற்குழுக் கூட்டத்தில், அதன் பொதுச்செயலர் தத்தாத்ரேயா ஹோசபெலெ நேற்று பேசியதாவது:
இந்தியா ஏற்கனவே, ஹிந்து தேசமாக இருக்கிறது; எதிர் காலத்திலும் அப்படியே இருக்கும்.
இதைத் தான், ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர் ஹெட்கேவாரும் தெரிவித்து இருந்தார்.
ஒருங்கிணைந்த தேசமாக இந்தியா எப்போதும் ஹிந்து நாடாக இருக்கும். இதை மக்களுக்கு உணர்த்தும் வேலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
இதனால், இந்தியாவை ஹிந்து நாடாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
சமீப காலமாக, தென் மாநிலங்கள் வேறு, வட மாநிலங்கள் வேறு என, ஒரு சிலர் கூறி வருகின்றனர். மேலும், இந்தியாவில் இருந்து தென் மாநிலங்களை பிரிக்க, தங்களை திராவிடர்கள் என்றும், வேறு மொழி பேசுபவர்கள் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சி. இதை எதிர்த்து போராட நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் நாட்டு மக்கள் பங்கேற்க, அடுத்த ஆண்டு ஜன., 1 – 15 வரை, நாடு முழுதும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வீடு வீடாக பிரசாரத்தில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்