அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழு, தீபாவளியைக் கொண்டாட சென்னை திரும்புகின்றனரா? இல்லை, வெளிநாட்டிலேயே படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுமா? த்ரிஷா தவிர இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனரா? மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், ‘விடா முயற்சி’ படம் குறித்த இப்படியான பல கேள்விகள் பலரிடமும் இருந்து வருகிறது.

அ.வினோத்தின் இயக்கத்தில் ‘துணிவு’ படத்திற்குப் பின், இப்போது ‘விடா முயற்சி’யில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜூன் தாஸ், அருண் விஜய், ரெஜினா எனத் தெரிந்த முகங்கள் பலர் நடித்து வருகின்றனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துவருகிறார். ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த கதையில் ‘விஸ்வாசம்’ போல ஒரு எமோஷனல் போர்ஷனும் உள்ளது என்கிறார்கள்.
அஜர்பைஜானில் தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என முன்பு சொல்லியிருந்தோம். அதன்படி தீபாவளிக்கு சின்னதொரு பிரேக் எடுத்த பிறகு படக்குழு சென்னை திரும்பலாம் என ஒரு திட்டம் இருந்தது. ஆனால், முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி விடுவோம் என அஜித் விரும்பியதால், படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. சுப்ரீம் சுந்தரின் சீறிப் பாயும் ஸ்டண்ட்களும், பரபரப்பான சேஸிங் சீன்களும் அங்கே படமாக்கப்பட்டிருக்கிறது.

கலை இயக்குநர் மிலனின் மறைவு அஜித் உள்பட பலரையும் கண்கலங்கச் செய்திருந்தாலும் மிலனின் இழப்பினால் ‘விடா முயற்சி’யின் பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. அதற்குக் காரணம், மிலனின் மனைவி மரியா மிலன். அஜித்தின் ‘வீரம்’ படத்தில் தொடங்கி ‘விடாமுயற்சி’, சூர்யாவின் ‘கங்குவா’ வரை மிலனுடன் இணைந்து ஒரு உதவி கலை இயக்குநராக மரியா மிலனும் வேலை செய்து வந்தார். அவரது உழைப்பை அறிந்த அஜித்தும், சூர்யாவுமே தங்கள் படங்களுக்கு மரியா மிலனையே கலை இயக்குநர்களாக்கிவிட்டனர்.
‘வலிமை’ படப்பிடிப்பும் கூட தீபாவளி அன்று ஹைதராபாத்தில் தான் நடந்தது. அதேபோல, இப்போது ‘விடா முயற்சி’ படப்பிடிப்பும் அங்கே தீபாவளியைக் கொண்டாடுகிறது.