இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து சில காலமாகவே மோதல்போக்கு நீடிக்கிறது. ஏற்கெனவே இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்திருக்கும் நிலையில், இந்தியாவில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகக் கூறும் கனடா, ஹர்தீப் சிங் கொலை குறித்த விவகாரத்தில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

இந்தச் சூழலில், கனடாவின் ஸ்மார்ட் எரிசக்தி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வின்போது ஊடகங்களுடன் பேசிய கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “ஆரம்பத்திலிருந்தே, கனேடிய குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்ற நம்பகமான குற்றச்சாட்டுகளை நாங்கள் அறிந்தோம். கனேடிய மண்ணில், இந்த விஷயத்தின் உண்மையைக் கண்டறிய எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ள நாங்கள் இந்தியாவை அணுகியிருக்கிறோம்.
எங்கள் நண்பர்களான அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளையும் அணுகியிருக்கிறோம். ஏனெனில் இந்த விவகாரம் ஒரு ஜனநாயகத்தின் சட்டம் மற்றும் இறையாண்மைமீதான ஆபத்து. சட்ட அமலாக்க மற்றும் புலனாய்வு முகமைகள் தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்து வருவதால், அனைத்து நட்பு நாடுகளுடனும் தொடர்ந்து பணியாற்றுவோம். கனடா எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்கு ஆதரவாக நிற்கும் நாடு. பெரிய நாடுகள் சர்வதேச சட்டத்தை எந்த விளைவுகளுமில்லாமல் மீறினால், முழு உலகமும் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானதாக மாறும்.

எனவே, இந்திய அரசாங்கத்திடமும், உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகளிடமும் இதைப் பற்றித் தெரிந்துகொள்ள முயன்றுள்ளோம். அதன் காரணமாகத்தான் இந்தியா, வியன்னா உடன்படிக்கையை மீறி 40-க்கும் மேற்பட்ட கனேடிய தூதர்களைத் தன்னிச்சையாக வெளியேற்றியபோது, நாங்கள் மிகவும் ஏமாற்றமடைந்தோம். கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் ஒருவரைக் கொன்றதில் இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு எங்களிடம் தீவிரமான காரணங்கள் இருக்கின்றன.
மேலும் வியன்னா உடன்படிக்கையின்கீழ் கனேடிய தூதர்களின் உரிமைகளை மீறுவதன் மூலமும், ஒட்டுமொத்த கனேடிய தூதர்களை வெளியேற்றியதன் மூலமும் கூறப்பட்ட இந்தியாவின் பதில், உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்குக் கவலையளிக்கிறது. எனவே, நாங்கள் இப்போது நடத்த விரும்புவது போராட்டமல்ல. ஆனால் நாங்கள் எப்போதும் சட்டத்தின் ஆட்சிக்காகச் சந்தேகத்திற்கு இடமின்றி நிற்போம்” எனத் தெரிவித்திருக்கிறார். கனடா பிரதமர் ட்ரூடோவின் சமீபத்திய கருத்துகளுக்கு, வெளியுறவு அமைச்சகம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.