ஹமாஸை அழித்தொழிக்காமல் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி பாலஸ்தீனத்தின் காஸாமீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 11,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருக்கின்றனர். 36 நாள்களாக நடக்கும் இந்தப் போரில், காஸாவில் சிறுவர்கள் மட்டுமே 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். காஸாவில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) வேதனை தெரிவித்திருக்கிறார். ஆனால், `காஸாவில் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு ஹாமாஸ்தான் காரணம், நாங்கள் அல்ல.

பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காதவரைப் போர் நீண்டுகொண்டே போகும்’ என்று கூறிவருகிறது இஸ்ரேல். ஆனால், இஸ்ரேலின் இத்தகைய தாக்குதலால், பொதுமக்களையும் தாண்டி காஸா மருத்துவமனையில் முறையான தண்ணீர், உணவு, மின்சாரம், மருந்துப் பற்றாக்குறை போன்றவற்றால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “நாங்கள் காஸாவை ஆக்கிரமிக்க நினைக்கவில்லை. அதை ஆளும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இஸ்ரேல் யாரையும் அகதிகளாக்க விரும்பாது” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், கிழக்கு ஜெருசலேம் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலும், ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் பகுதியிலும், இஸ்ரேல் தொடர்ந்து குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைக் கண்டிக்கும் வகையில், ஐ.நா-வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்துக்கு, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. 18 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக, இந்தியா வாக்களித்திருக்கிறது. இது குறித்துப் பேசிய ஐ.நா-வின் இந்தியாவுக்கான துணைப் பிரதிநிதி யோஜ்னா படேல், “இந்தப் பிரச்னையில் இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிசெய்ய விரும்புகிறது. இஸ்ரேல்மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல்களை எந்த வகையிலும் ஏற்க முடியாது. பயங்கரவாதத்தில் எந்தவித சமரசத்தையம் ஏற்க முடியாது.
எங்கள் எண்ணங்கள் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களிடமும் இருக்கிறது. அவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டும். காஸா மக்களுக்கு சர்வதேச சமூகம் மனிதாபிமான உதவிகளை வழங்குவதை வரவேற்கிறோம். இந்தியாவும் இந்த முயற்சிக்குப் பங்களித்திருக்கிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதை, இந்தியா எப்போதும் ஆதரவளிக்கிறது, வலியுறுத்துகிறது. அதுதான் இறையாண்மைமிக்க, சுதந்திரமான பாலஸ்தீனத்தை நிறுவுவதற்கு வழிவகுக்கும்” என்றார்.