‘ஜிகர்தண்டா டபுள் X’ திரைப்படம் பார்வையாளர்களுக்கு ருசிகரமான வெளியீடாக இந்த தீபாவளிக்கு திரைக்கு வந்திருக்கிறது.
ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரின் நடிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 4 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தியேட்டர் ரிலீஸ் இதுதான். இத்திரைப்படத்தில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங் கொண்ட கிளின்ட் ஈஸ்ட்வுட் பற்றி ஒரு வசனம் இடம்பெற்றிருக்கும். படத்தில் அவருன்கு மெகா சைசில் கட் அவுட், ராகவா லாரன்ஸின் அபிமான ஹீரோ கிளின்ட் ஈஸ்ட்வுட் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கம். படத்தைப் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் ‘யார் இவர் ?’ என்கிற கேள்வி எழுந்திருக்கும். அதற்கான விடையைத்தான் இப்போது விரிவாக பார்க்கப் போகிறோம்.
வேறு ஒரு தளத்திலிருந்து சினிமாவின் பக்கம் திரும்பியவர்களைப் பற்றி நாம் அறிந்திருப்போம். அவர்களில் பலரின் சாதனைகளைக் கேட்டு வியந்திருப்போம். அப்படி வேறு ஒரு தளத்திலிருந்து சினிமாவின் பக்கம் திரும்பி சாதனைகளைப் படைத்து 93 வது வயதிலும் தனக்கென ஒரு தனி முத்திரையைக் கொண்டிப்பவர், கிளின்ட் ஈஸ்ட்வுட். இன்று நாம் பல சினிமாக்களில் பார்த்து வியக்கும் வெஸ்டர்ன் வடிவிலான கெளபாய் தோற்றத்திற்கு விதை போட்டவர்களில் இவரும் ஒருவர்.

ஆம், அந்த விதையிலிருந்து நிகழ்ந்த ரசனையின் விளைவாக இன்று பல படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்யின் லியோ தாஸ் கதாபாத்திரம் ஒரு ரிவால்வர் சுற்றுவதைப் பார்த்திருப்போம். அதுமட்டுமின்றி லியோ தாஸ் கதாபாத்திரம் அந்த ரிவால்வரை ஒவ்வொரு கோணத்திலும் தனது இரு கைகளிலும் ஏந்திச் சுடுவார். அந்த அக்மார்க் ஸ்டைலுக்கும் சொந்தக்காரர், கிளின்ட் ஈஸ்ட்வுட்தான்.
1951-ல் அமெரிக்க ராணுவத்தில் ஈஸ்ட்வுட் இணைந்தார். கொரியன் போரில் இவரும் அமெரிக்க ராணுவத்திலிருந்து முக்கியப் பங்காற்றியிருக்கிறார். ஒரு முறை போர் விமானத்தில் சிக்கிய இவர் மரணத்திலிருந்து நூலிழையில் தப்பியிருக்கிறார். இப்படி ராணுவத்தில் பல அனுபவங்களை ஈஸ்ட்வுட் வைத்திருக்கிறார். இவர் ராணுவ அதிகாரியாக இருக்கும்போது ஆர்ட் கோட்டையில் யூனிவர்சல் ஸ்டுடியோவிலிருந்து வந்த கேமரா குழு படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது. அந்த சமயத்தில்தான் சினிமாவின் தாக்கம் ஈஸ்ட்வுட்டிற்கு ஏற்பட்டிருக்கிறது. அங்கு சக் ஹில் என்பவர் ஈஸ்வுட்டிடம் சினிமாவைப் பற்றி பேசியிருக்கிறார். அவர் மூலமாகத்தான் சினிமாவின் வாசலை ஈஸ்ட்வுட் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஹில்லின் உதவியால் முதலில் ஒளிப்பதிவாளர் கிளாஸ்பெர்க்கைச் சந்தித்திருக்கிறார். அவர் மூலமாக இயக்குநர் ஆர்தர் லுபினின் திரைப்படத்தில் நடிக்க ஆடிஷனுக்குச் செல்கிறார்.

அங்கு ஈஸ்ட்வுட்டின் உருவத்தைப் பார்த்து ஈர்க்கப்பட்ட இயக்குநருக்கு ஈஸ்ட்வுட்டின் நடிப்பு திருப்திபடுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஈஸ்ட்வுட்டை டிராமா வகுப்புகளுக்குச் சென்று நடிப்பு கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இது போன்று பல ஆடிஷன்களில் பல அவமானங்களை ஈஸ்ட்வுட் சந்தித்திருக்கிறார். இத்தனை இன்னல்களைத் தொடர்ந்து சந்தித்த போதிலும் ஈஸ்ட்வுட் சோர்ந்துவிடாமல் பல ஆடிஷன்களுக்குச் சென்றிருக்கிறார். அதன் பிறகு தொலைக்காட்சி தொடர்களிலும் சினிமாவிலும் கிடைத்த சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.
இப்படியான உழைப்பிற்குப் பலனாக வந்தமைந்ததுதான் தொலைகாட்சி தொடர் `ராவைட்’ (Rawhide) . இந்தத் தொலைக்காட்சி தொடர்தான் ஈஸ்ட்வுட்டை சினிமாவில் அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல அணிலாகப் பங்காற்றியிருக்கிறது. இந்த தொலைகாட்சித் தொடரின் கதாபாத்திரத்தின் மேல் ஈஸ்ட்வுட்டிற்கு நாட்டமில்லாமல் இருந்திருக்கிறது. ஆனால், இந்தத் தொடரோ ஹிட் மீட்டரின் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 1959 ஆம் தொடங்கப்பட்ட இந்தத் தொடர் 1965 வரை ஒளிபரப்பாகியிருக்கிறது. இதன் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்ட க்ளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு இத்தாலிய இயக்குநர் செர்ஜியோ லியோன் இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘டாலர்ஸ் டிரையாலஜி’ (Dollars triology) எனக் கூறப்படும் ‘ எ பிஸ்ட்ஃபுல் ஆப் டாலர்ஸ்’ (a fistful of dollars), ,ஃபார் எ ஃபியு டாலர்ஸ் மோர்’ (for a few dollars more), தி குட், தி பேட் & தி அக்லி ‘( the good , the bad & the ugly ) என மூன்று திரைப்படங்களிலும் பெயரில்லாத கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

முதலில் இத்தாலிய மொழியில் வெளியான இத்திரைப்படம், பிறகு அமெரிக்காவில் வெளியாகி மக்களை பெரிய அளவில் கவனம் பெற்றது. ஒரு தொப்பி, வாயில் ஒரு சுருட்டு, கையில் ஒரு ரிவால்வர். ஈஸ்ட்வுட்டின் இந்த உருவம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இன்று நாம் பல படங்களில் பார்க்கும் கெளபாய் கதாபாத்திரங்களின் தோற்றத்திற்கும் உடல் மொழிக்கும் ஈஸ்ட்வுட்தான் முன் உதாரணம். ஆனால், அமெரிக்க சினிமா விமர்சகர்களோ “இத்திரைப்படம் வன்முறையால் நிரம்பியது” என விமர்சனங்களை எழுதினர். அதனைத் தொடர்ந்து ஈஸ்ட்வுட் தனது ரூட்டை டைரக்ஷன் பக்கம் திருப்பினார். அதிலும் வெற்றிக் கொடி நாட்டினார். பின் சில தோல்விகளையும் சந்தித்திருக்கிறார்.
விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டாலும் மக்கள் மனதில் ஈஸ்ட்வுட்டின் கெளபாய் தோற்றம் அலாதியான பங்கைப் பிடித்திருந்தது. டைரக்ஷனில் தொடர் தோல்விகளைச் சந்தித்த இவர் மீண்டும் கெளபாய் தோற்றத்தில் இவரே இயக்கி நடித்த ‘ அன் ஃபர்கிவன்’ (Unforgiven) படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். இத்திரைப்படம் இவருக்கு ஆஸ்கர் விருதையும் பெற்றுத்தந்தது. இப்படியான சாதனைகளை படைத்த இந்த சூப்பர் ஸ்டார், ஹாலிவுட்டின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான டிக்காப்ரியோவை வைத்து ‘ஜே. எட்கர்’ ( J.Edgar ) திரைப்படத்தை இயக்கினார்.

93 வயதிலும் ஈஸ்ட்வுட் ஹாலிவுட்டில் பரபரப்பாக இயங்கி வருகிறார். சினிமா என்பதைத் தாண்டி அரசியலிலும் பங்கெடுத்திருக்கிறார். 1986, 2001 ஆகிய வருடங்களில் அமெரிக்காவின் கார்மெல் பகுதியின் மேயராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார். இந்த வருடம் இவர் ‘ஜுரர் நம்பர் 2’ என்கிற திரைப்படத்தை இயக்கப் போகிறார்.
இப்படியான ஜாம்பவான்தான் இன்றைய இளைய தலைமுறை இயக்குநர்களுக்கு இன்ஸ்பிரேஷன். இன்றைய இளம் இயக்குநர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் விஷ் லிஸ்ட்களின் இவரின் திரைப்படங்கள் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் !