உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பாக ஆடி பல சாதனைகளை முறியடித்திருக்கிறது.
குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எக்கச்சக்க சாதனைகளை முறியடித்து அசத்தியிருக்கிறார். அந்தச் சாதனைகளின் பட்டியல் இங்கே…

*ஒரே ஆண்டில் ஓடிஐ போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா செய்திருக்கிறார். நடப்பு ஆண்டில் இதுவரை 60 சிக்சர்களை ரோஹித் சர்மா அடித்திருக்கிறார். முன்னதாக 2015 ஆம் ஆண்டில் டி வில்லியர்ஸ் ஒரே ஆண்டில் 58 சிக்சர்களை அடித்திருந்தார்.
*உலகக்கோப்பையின் ஒரு தொடரில் அதிக சிக்சர்களை அடித்த கேப்டன் எனும் சாதனையும் ரோஹித் வசமாகியிருக்கிறது. முன்னதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் 2019 உலகக்கோப்பையில் 22 சிக்சர்களை அடித்திருந்தார். அதை முறியடித்து ரோஹித் சர்மா நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 24 சிக்சர்களை அடித்திருக்கிறார்.
*நடப்பு ஆண்டில் ரோஹித்தும் சுப்மன் கில்லுமே அதிகமாக 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கின்றனர். இருவரும் நடப்பு ஆண்டில் இதுவரை 5 முறை 100+ பார்ட்னர்ஷிப்பை அமைத்திருக்கின்றனர்.
*இந்திய அணியின் கேப்டன்களில் உலகக்கோப்பையின் ஒரு தொடரில் அதிக ரன்களை அடித்த கேப்டன் எனும் சாதனையையும் ரோஹித் செய்திருக்கிறார். நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் இதுவரை 503 ரன்களை எடுத்திருக்கிறார். முன்னதாக, 2003 உலகக்கோப்பையில் சவுரவ் கங்குலி 465 ரன்களை எடுத்திருக்கிறார்.

*தொடர்ச்சியாக அடுத்தடுத்த 2 உலகக்கோப்பைகளிலும் 500+ ரன்களை எடுத்திருக்கும் முதல் வீரர் எனும் சாதனையையும் ரோஹித் செய்திருக்கிறார். 2019 உலகக்கோப்பையில் 5 சதங்களுடன் 648 ரன்களை ரோஹித் அடித்திருந்தார். நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 503 ரன்களை அடித்திருக்கிறார்.
நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வியையே தழுவாமல் மிகச்சிறப்பாக ஆடி வருகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டம்தான் பெரிய காரணமாக இருந்திருக்கிறது.
ரோஹித் சர்மாவின் ஆட்டம் குறித்து உங்களின் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!