ஒட்டாவா: கனடாவில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது, 11 வயது மகனை சுட்டுக் கொன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வட அமெரிக்க நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு குழுக்களாக பிரிந்து தொழில் செய்து வரும் அவர்களிடையே பகையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்திய வம்சாவளி சீக்கியரான ஹர்ப்ரீத் சிங் உப்பல், 41 மற்றும் அவரது 11 வயது மகன் ஆகியோர் எட்மோண்டன் நகரில் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஹர்ப்ரீத் சிங், அவரது மகன், மகனின் நண்பர் ஆகியோர் காரில் சென்ற போது, பின்தொடர்ந்து வந்த நபர்கள், மற்றொரு காரில் இருந்து இவர்களை நோக்கி சுட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
காரில் இருந்த மகனின் நண்பன், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடும் பணியை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
இறந்த ஹர்ப்ரீத் சிங் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால், மற்றொரு குழுவைச் சேர்ந்த நபர்கள், தொழில் விரோதம் காரணமாக இந்த கொலையை செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
கடந்த ஜூனில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியாவின் மீது பழி சுமத்தப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சிக்கலில் உள்ளது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியான ஹர்ப்ரீத் சிங் கொல்லப்பட்டுள்ளதால், இந்தியா – கனடா இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement