காமெடியன்.. ஹீரோ.. அடுத்து?: பூரிப்பில் சூரி

விடுதலை தந்த வெற்றியையடுத்து காமெடி பாத்திரங்களை விட கதாநாயகனாக அடுத்தடுத்து படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார் நடிகர் சூரி. கதாநாயகனாக விடுதலை 2 படத்தை முடித்த கையுடன், அடுத்த படத்திற்கு தேனியில் 55 நாட்களாக முகாமிட்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு இடைவெளியின் போது தினமலர் தீபாவளி மலருக்காக அவர் பேசியதிலிருந்து…

விடுதலை எந்தளவுக்கு பேசப்பட்டதோ அதை விட ஒரு படி மேலே விடுதலை 2 பேசப்படும். வெற்றிமாறன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் டைட்டில் வைக்காத படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறேன். விரைவில் டீசர் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் காமெடி பாத்திரங்களிலும் நடித்து வருகிறேன். தயாரிப்பாளர்கள் என்னை நம்பி கதாநாயகனாக நடிக்க வேண்டும் என முதலீடு செய்கிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டிய பொறுப்பு இருக்கிறது.

மொத்தத்தில் நல்ல நடிகனாக திகழ்ந்தால் போதும். மக்களை மகிழ்விக்கும் நடிகனாக இருக்க வேண்டும். நமக்கு என்று ஒரு தனித்துவமும் இருக்க வேண்டும். நேற்று காமெடியனாக இருந்தேன். இன்று ஹீரோவாக நடித்து கொண்டிருக்கிறேன். அடுத்து என்ன? யாருக்கு தான் தெரியும். எந்த வாய்ப்பு வந்தாலும் அது சரியாக இருக்கும்பட்சத்தில் தொடர்ந்து பயணிப்பேன். காமெடியனாக நடிக்க அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். படப்பிடிப்புகளில் சும்மா இருக்கமுடியாது. மக்களை எந்தவகையில் சிரிக்க வைக்க முடியும் என சிந்தித்து கொண்டே இருக்கவேண்டும். அதுவும் இன்றைய காலகட்டத்தில் பஞ்ச் வசனங்களை மக்கள் கவனிக்கின்றனர். பத்தாண்டுகளுக்கு முன் பத்து பஞ்ச் வசனங்கள் பேசினால் 9 ஒர்க் அவுட் ஆகிவிடும். மக்களை சிரிப்பில் ஆழ்த்தி விடும். ஆனால் இன்று நுாறு பஞ்ச் வசனங்கள் அடித்தாலும் ஒன்றிரண்டு தான் ஒர்க் அவுட் ஆகிறது.

படம் பார்க்கும் ரசிகர்கள் மாணவர்களாக மாறி விடுகின்றனர். தற்போது எல்லாத்தையும் கவனிக்கின்றனர். நாங்க ஸ்கிரீனில் உள்ளோம் என்றால் ரசிகர்கள் ஸ்கிரீனுக்கு வெளியில் உள்ளனர். அதுதானே ஒழிய காமெடிக்கான சென்ஸ் ஸ்கிரீனுக்கு உள்ளே இருப்பதை விட வெளியே ரசிகர்களிடம் பயங்கரமாக உள்ளது. ஆனால் ஹீரோ ஆன பிறகு ஜாலியாக இருக்கேன். இயக்குனர்கள் சொல்வதை உள்வாங்கி கொண்டு செய்தால் போதும். அடுத்தடுத்து மேலும் இரு படங்களில் கதாநாயகனாக நடிக்கஉள்ளேன். ராம் இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். கொட்டுகாளி என்ற படத்தில் நடித்து கொடுத்து உள்ளேன்.

ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் எப்போது என ரசிகர்கள் கேட்கின்றனர். விரைவில் இணைந்து நடிக்க போகிறோம். கடவுள் புண்ணியத்தில் இந்தளவுக்கு நான் உயர்ந்து நிற்க காரணம் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த படங்களும், என்னை இயக்கிய எல்லா இயக்குனர்களும் தான். பெண்களும், குழந்தைகளும் என்னிடம் பிரியமாக உள்ளனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன்.

நம்மை சுற்றியுள்ள சங்கடங்களாகட்டும், எதிர்மறை எண்ணங்களாகட்டும் பட்டாசு போல வெடித்து சந்தோஷம் தருவதாக இந்த தீபாவளி அமையட்டும். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை மதுரையில் சொந்த கிராமத்தில் ஒட்டு மொத்த குடும்பமும் சேர்ந்து கொண்டாடுவோம். நண்பர்களும் வந்து விடுவர். எனவே உற்சாகத்துக்கும் குறைவிருக்காது. எல்லோருக்கும் உற்சாகமான தீபாவளியாக அமையட்டும். மத்தாப்புகளாக மலரட்டும் மகிழ்ச்சி. இவ்வாறு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.