குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: ஒரு நாள் முழுவதும் பதுங்கியிருந்து நள்ளிரவில் வெளியேறியது

குன்னூர்: குன்னூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒரு நாள் முழுவதும் வீட்டினுள் பதுங்கியிருந்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். நள்ளிரவில் வீட்டிலிருந்து சிறுத்தை வெளியேறியதாக வனத்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள புரூக்லாண்ட் பகுதியில் உள்ள வீட்டில் வளர்க்கும் நாயை துரத்திக்கொண்டு வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்தது.உடனடியாக குன்னூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

வீட்டில் இருந்தவரை காப்பாற்ற சென்ற, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உட்பட 6 பேரை சிறுத்தை தாக்கியது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை வீட்டை விட்டு வெளியேறவில்லை.
இதனால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சிறுத்தை வீட்டின் ஒரு அறையில் பதுங்கி இருப்பதை, வீட்டின் ஓட்டை பிரித்துப் பார்த்த போது தெரியவந்தது. எனவே, சிறுத்தை வெளியேற வீட்டின் கதவுகளை திறந்து வீட்டு, கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி கண்காணித்தனர். இந்நிலையில், நேற்று இரவு சிறுத்தை வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் டி.வெங்கடேஷ் கூறியதாவது: குன்னூர் சரகம், புரூக்லேண்ட் பகுதியில் காப்பு காட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவில் இருந்த பங்களாவுக்குள் நேற்று அதிகாலையில் சிறுத்தை ஒன்று நாயை விரட்டிக்கொண்டு வந்ததில், உள்ளே நுழைந்துவிட்டது. உடனடியாக தகவல் வனவருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சிறுத்தை அவர்களை தாக்கியது. உடனடியாக வனப்பணியாளர்கள் மற்றும் மீட்புக்குழுவுடன் வீட்டுக்குள் சென்று அனைவரையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டனர். சிறுத்தை தாக்கியதில் காயமடைந்தனர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்கள்.

பின்னர் நான், துணை இயக்குநர், அருண்குமார் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர், குன்னூர் சரகர் மற்றும் பணியாளர்களுடன் சேர்ந்து அந்த வீட்டைச் சுற்றி யாரும் செல்லாதவாறு பார்த்துக் கொண்டோம்.

சிறுத்தை வீட்டுக்குள் எங்கே இருக்கிறது என்பதை அறிய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு ஸ்டோர் ரூமில் சிறுத்தை பதுங்கி இருப்பதை ஓட்டைப் பிரித்து பார்க்கும் போது தெரிந்தது. நேற்று தீபாவளி என்பதால் அதிக பட்டாசுகள் அந்த பகுதிகளில் வெடிக்கப்பட்டது. அந்த சத்தத்தை கண்டு சிறுத்தை அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. எனவே, சிறுத்தை இருந்த அறைக்கு வெளியே மற்றும் வீட்டுக்கு வெளியே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கபட்டது. அனைத்து கதவுகளையும் திறந்து வைக்கப்பட்டு எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் அப்படியே இரவு வரை விடப்பட்டது. இரவு 11 மணி அளவில் சிறுத்தை தானாகவே வீட்டை விட்டு வெளியே சென்று விட்டது. சிறுத்தை வீட்டுக்குள் இருந்த அறையில் இருந்து வெளியேறும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.

இன்று காலை கால்நடை மருத்துவர், சரகர் மற்றும் வட்டாட்சியர் வீட்டுக்குள் அனைத்து அறைகளைக்கும் சென்று ஆய்வு செய்தனர். சிறுத்தை வெளியேறியதை அவர்கள் உறுதி செய்தனர். இவ்வாறு அவர் கூறினார். குன்னூரில் வீட்டினுள் சிறுத்தை புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.