பிரிட்டன் உள்துறை அமைச்சர் பதவி நீக்கம்: ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை

லண்டன்: பிரிட்டன் நாட்டு உள்துறை அமைச்சர் சுயாலா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் உள்துறை அமைச்சராக இருந்து வந்த அவரை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அண்மையில் நடந்த பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதை போலீஸார் தவறிவிட்டதாக விமர்சித்ததால் சுயாலா பிரேவர்மேன் சர்ச்சையில் சிக்கினார். அவரை பதவி நீக்கம் செய்ய பிரதமர் ரிஷி சுனக்குக்கு கடுமையான அழுத்தங்கள் இருந்த நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சுயலா நீக்கப்பட்டுள்ளார்.

சுயாலா பிரேவர் மேன் கன்சர்வேடிவ் கட்சியில் நன்கு அறியப்பட்டவராகவே இருந்தார். ஆனால், அவரது விமர்சனத்துக்குப் பிறகு உட்கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. போலீஸார் இரட்டை வேடம் போடுவதாக அவர் விமர்சித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக ஜேம்ஸ் க்ளெவர்லி உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் லண்டனில் நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணிகளை போலீஸார் சரிவர கட்டுப்படுத்தவில்லை என்று கூறிய சுயாலா பிரேவர்மேன் அந்தப் பேரணிகளை வெறுப்புப் பேரணிகள் என்றும் கூறியிருந்தார். இது பிரிட்டன் அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியது. நேற்று (ஞாயிறு) லண்டனில் வலதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுயலா பிரேவர்மேன் பேச்சால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர பிரிட்டன் முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான டேவிட் கேமரூன் பிரிட்டன் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை முன்னதாக ஜேம்ஸ் க்ளெவர்லி வகித்துவந்தார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம், இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் பிரிட்டனின் பெல்பாஸ்ட், பிர்மிங்காம், கார்டிப் உள்ளிட்ட நகரங்களில் பேரணி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது ஜிகாத் தொடர்பான கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைக் கண்டித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “பிரிட்டன் நகரத் தெருக்களில் வெறுப்புணர்வை காண முடிந்தது. அப்போது ஜிகாத்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது யூத சமூகத்துக்கு மட்டுமல்ல, நமது ஜனநாயக விழுமியங்களுக்கும் அச்சுறுத்தலாகும். நமது நாட்டில் யூதர்களுக்கு எதிரான போக்கை சகித்துக் கொள்ள முடியாது. தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. காவல்துறை இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.